Friday, 5 Sep 2008

2008/09/05 Lenavin Payna Katturai

shanghai-hotel.jpgசீனம் சென்று வந்தேன்

கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

சீனாவைப் பற்றிக் கடந்த 42 வாரங்களில் விரிவாகவும் இதுவரை வெளிவராத பல புதிய செய்திகளோடும் சில இடங்களில் வெளிப்படையான விமர்சனப் பார்வைகளோடும் எழுதிவிட்டேன்.

சீனா சென்று வந்தவர்கள் பலரும் அதன் புகழை மட்டுமே பாடியிருக்கிறார்கள். நான் சீனாவின், சீனர்களின் மறுபக்கத்தையும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறேன்.

என் சீனப் பயணத்தை இனிதே முடித்துக்கொண்டு சிங்கப்பூர் சென்று ஸ்டார் ஜெட் விமானத்திற்கு மாறி தைவானின் தலைநகரான தைப்பேயை அடைவது என் அடுத்த இலக்காக ஆயிற்று.

செந்தில்குமாரிடமிருந்து பிரியா விடைபெற்றேன். என் வெளிநாட்டுப் பயணங்களின் போது எந்த நாட்டிலும் நான் ஒரு தனிமனிதரைச் சார்ந்து இருந்ததே இல்லை.

ஆனால், சீனப் பயணத்தின் போது அப்படி அல்ல. நாள் முழுக்க முழுக்க செந்தில் குமாரை மட்டுமே சார்ந்து இருந்தேன்.

இவர் மூலமாக எனக்குப் பல சீன அறிமுகங்கள் கிடைக்காதபோதும் மையப் புள்ளியாக இவரே இருந்தார்.

என் சீனப் பயணத்திற்கு வித்திட்டு, விசா பெற ஏற்பாடு செய்து, என்னைத் தம்முடன் தங்க வைத்து, நான் தங்கியிருந்த அத்துணை நாள்களும் கூடவே இருந்து, சீனாவைப் பற்றி ஏராளமான தகவல்களைத் தந்து, மகத்தான உதவிகள் பலவற்றைப் செய்து, என் உள்ளம் உணர்ந்து பழகி அப்பப்பா, சொல்ல வார்த்தைகள் இல்லை.

நான் தாயகம் திரும்பிய பிறகும் தொடர்ந்து பேசிக் கொள்கிறேன். நட்பைப் பராமரிக்கிறேன். ஒரு தற்காலிக நண்பராக, என்னைக் கடந்து போகிற நண்பராக நான் செந்தில்குமாரரைக் கருதியதே இல்லை.

சீனத்திற்கும் தைவானுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஹாங்காங்கைத் தன் ஆளுகைக்குள் பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுவித்துக் கொண்டு வந்துவிட்ட சீனாவிற்கு அடுத்த இலக்கு தைவான்தான்.

நான் ஏற்கனவே இப்பயணக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி சீனாவில் தைவானியர்களின் தொழில் ஆதிக்கம் மிக அதிகம்.

சீனப் பொருளாதாரத்திலிருந்து தைவானை முற்றிலும் அகற்றிவிட்டால் சீனா சற்றுப் படுத்துவிடும்.

தைவானியக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இவர்களை ஈர்க்கும் விதமாகவும் இவர்களுக்கு ஆதரவாகவும்தான் சீனா நடந்துகொள்கிறது. ஏராளமான சீனர்களுக்கு தைவானியர்கள் முதலாளிகளாக இருக்கிறார்கள்.

சீன அரசும் தைவானிய அரசும் நட்புணர்வு பாராட்டினாலும் உள்ளுக்குள் ஒரு புகைச்சல் உண்டு என்பது பலருக்கு வெளியில் தெரியாது. தைவானை சீனா விழுங்கப் பார்க்கிறது. தைவானோ தொழில் வளர்ச்சியால், அரசியல் பலத்தால் இதைத் தடுக்கும் விதத்தில் தாக்குப் பிடிக்கிறது.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில்கூட சீனாவையும் தைவானையும் பிரிக்க முடியாது.

பூகோள ரீதியாகப் பார்த்தாலும் சீனாவின் வாலாகத்தான் தைவான் அமைந்திருக்கிறது. எனவே சீனத்தையும் தைவானையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

எனவே சீனப் பயணத்திற்குள்ளேயே தைவானையும் இணைத்துக் கொள்கிறேன்.

சிங்கப்பூரில் ஸ்டார் ஜெட் விமானத்தைப் பிடிக்கத் காத்திருந்த வேளையில் ஒரு கல்லூரி மாணவி வயதில் அழகான தோற்றத்தில் தோள்பட்டையில் ஒரு பை, கையில் ஒரு மெகா அளவு நோட்டுப் புத்தகம் மற்றும் பேனாவுடன் ஒரு பெண் என்னை அணுகினார்.

”உங்களுக்கான விமானத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று நம்புகிறேன்” என்று தன் சென்ட் மணம் என்னைத் தாக்குகிற அளவிற்கு என்னை நெருங்கி நின்று பேசினாள்.

‘எப்படிம்மா உனக்கு அது தெரிந்தது’ கேட்க நினைத்து, கேட்காமல் ”ஆமாம்” என்று மட்டும் சொன்னேன்.

பிறகுதான் தோன்றியது, நான் காத்திருந்த பகுதியில் கிளம்பவேண்டிய விமானங்களுள் ஸ்டார் ஜெட் ஒன்றுதான் பாக்கி என்பதும், அதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது என்பதைப் பலகைகள் அறிவித்ததும்.

சிங்கப்பூர் சுற்றுலாக் கழகத்தால் நியமிக்கப்பட்ட பெண்மணியாம் இவர்.

கேள்விகள் ஏகப்பட்டவை. பல பக்கங்களுக்குக் கேள்விகள் ஓடின.

”எத்தனை முறை சிங்கப்பூருக்கு வந்திருக்கிறீர்கள்?”

”ம்ம்ம்.. பாஸ்போர்ட்டுகளைப் புரட்டிப் பார்த்துத்தான் எண்ணிச் சொல்ல வேண்டும்.”

”ஓ! நான் தேடிக் கொண்டிருக்கும் சரியான நபர் நீங்கள்தான்”

‘என்னம்மா ஏதோ சீதை தேடிய ராமன் என்பது போல் சொல்றே’ இது உள்மனத்திற்குள் ஓடிய எண்ணம். சொல்லவில்லை.

”சிங்கப்பூரில் அரசு ஊழியர்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள்?”

”இதுவரையில் இனிமையான அனுபவம்தான். அன்பாகத்தான் நடத்துகிறார்கள்.”

”சிங்கப்பூரில் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது?”

”விலைகள் சில கடைகளில் தாறுமாறாக இருக்கின்றன. பேரம் பேசுபவர்களும் வாய் உள்ளவர்களும் தாம் கெட்டிக்காரர்கள். சொன்ன விலையைக் கொடுப்பவர்கள் ஏமாளிகள். உலக நாடுகள் பலவற்றில் பேரம் என்பதே கிடையாது. விலை சொன்னால் நம்பி வாங்கலாம். சிங்கப்பூருக்கு வரும் பல உல்லாசப் பயணிகள் ஏமாந்து போகிறார்கள்.”

இதுவரை எத்துணையோ பேர்களைப் பேட்டி கண்ட இந்த அம்மணி, என் பதிலை வியப்புடன் கேட்டு விரிவாகக் குறிப்பு எழுதிக்கொண்டதைப் பார்த்த போது, நான் இதுவரை எவரும் சொல்லாத புதிய கோணத்தில் சிங்கப்பூரைப் பற்றிச் சொல்லியிருக்கிறேனா என்று தோன்றியது.

”நன்றாகவே பதில் சொல்கிறீர்கள். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?”

”பத்திரிகையாளர்.”

”அதானே பார்த்தேன்” என்றவர், என் கையை மணிக்கட்டின் அருகே பிடித்துக் கொண்டார். மென்மையான சில்லென்ற விரல்கள் என் மணிக்கட்டைத் தொட்டது. ஒரு வித்தியாசமான அனுபவம். என்னை இந்தப் பெண்மணி கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததை என்னுடன் பயணிக்கச் சேர்ந்துகொண்ட சில பயணிகள் சந்தேகக் கண்களுடன் பார்த்தது எனக்குச் சற்றே எரிச்சலைத் தந்தது.

நான் ஏதோ தவறு செய்துவிட்டது போலவும், என்மீது ஏதோ விசாரணை நடப்பது போலவும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

முதலில் ஒரு சிலரே இருந்த எங்கள் பகுதி இப்போது மளமளவென நிறைய ஆரம்பித்துவிட்டது. ஓர் இந்தியர்கூடத் தென்படவில்லை. ஒரே மங்கோலிய முகங்கள்.

என்னைப் பேட்டி எடுத்த பெண்மணி கடைசியில், ”என் கேள்விகளுக்கு மிகப் பொறுமையாகப் பதிலளித்தீர்கள். நீங்கள் சொன்ன பல விஷயங்கள் எங்களுக்கு மிக உபயோகமானவை. எங்கள் சுற்றுலாத்துறை உங்கள் ஆலோசனைகளால் மேம்படும் என நம்புகிறேன்” என்று சொல்லிவிட்டு, ”உங்களுக்கு ஒரு பரிசு தர விரும்புகிறேன்” என்றார்.

”ஓ! இது வேறா?”

”ஆமாம். உங்க் தொழிலுக்கு உதவும் பரிசு” என்றார்.

சரிதான். அது ஓர் அழகான பேனா. வளவள எனக் கேள்வி கேட்டுப் பயன்மிகு (?) பதில்களை வாங்கிக் கொண்டு அவர்களைச் சும்மாவிடாமல் ஊக்கப் பரிசாக ஒரு பேனாவைத் தந்தது அருமையான யோசனை. இதனைப் பேட்டி எடுக்க அனுப்பும் நிறுவனங்கள் கருத்தில் கொள்வது நல்லது.

என் உடமைகளைச் சோதித்த பாதுகாப்புப் பிரிவினர் நான் கொண்டு சென்றிருந்த உணவுப் பொட்டலங்களைத் தனியே பிரித்தெடுத்து, விமான ஊழியரிடம் கொடுக்க,

அவர் என்னைத் தனியே அழைத்து ”ஜெட் ஸ்டார் விமானத்தில் வெளி உணவிற்கு அனுமதி இல்லை” என்றார்.

சிங்கப்பூரில் உள்ள என் உறவினர் பெண்மணி பாசமுடன் தயாரித்துத் தந்த உணவுகளை என் கண்ணெதிரே குப்பைத் தொட்டியில் கொட்டியபோது, விமான நிறுவனக் கொள்கையின்மீது சற்றே கோபம் வந்தது உண்மை.

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

 2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Posts Title


Leave a Reply