Sunday, 31 Aug 2008
சென்னை மாரத்தான்: கர்நாடக வீரர், கேரள வீராங்கனைக்கு முதலிடம்
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை மாரத்தான் போட்டியில் கர்நாடக வீரர் சந்தோஷ் குமார், கேரள வீராங்கனை பிரீஜா ஸ்ரீதரன் ஆகியோர் முறையே ஆடவர், மகளிர்க்கான 21.09 கிலோ மீட்டர் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
அவர்களுக்கு சான்றிதழ்களுடன் ரூ.10லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
ஏழைக் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட வளர்ச்சிகளுக்கு நிதி திரட்ட கிவ் லைப் அமைப்பு இந்த மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்தது.
4 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் சுமார் 1 லட்சம் பேர் கலந்துகொண்டனர். 21.09 கிலோ மீட்டர் போட்டியில் சுமார் 1,500 பேர் கலந்துகொண்டனர்.
கோட்டை அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இருந்து மெரீனா கடற்கரை வழியாக பெசண்ட்நகர் கடற்கரை சென்று திரும்பும் படியாக ஓட்டப்பாதை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போட்டியில் கர்நாடக வீரர் சந்தோஷ் குமார் 1 மணி 4 நிமிடம் 3 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பெற்றார். பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற சுரேந்திரா சிங் 2ஆம் இடத்தைப் பிடித்தார். சந்தீப்குமார் என்பவர் 3ஆவது இடத்தைப் பிடித்தார்.
மகளிர் பிரிவில் கலந்துகொண்ட 100 பேரில் கேரளாவைச் சேர்ந்த பிரீஜா ஸ்ரீதர் இந்த தூரத்தை 1 மணி 18 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி முடித்து முதல் இடம் பிடித்தார். பிரீதி எல். ராவ் 2ஆவது இடத்தையும், கவிதா ராட் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
2 மற்றும் 3ஆம் இடங்களைப் பிடித்தவர்களுக்கு முறையே ரூ. 5லட்சமும், ரூ.3 லட்சமும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கான போட்டியில் ஆடவர்களுக்கான ஆடவர் பிரிவில் பி. நாகேந்திரராவ் முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு தரப்பட்டது. மகளிர் பிரிவில் எம்.சுதா முதலிடம் பிடித்தார்.
முன்னதாக கோட்டை அருகே காலை 6.30 மணிக்கு ஹால்ப் மாரத்தான் (21.09 கி.மீ.) ஓட்டத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தான் (21.09கி.மீ) போட்டியில் கலந்துகொண்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (22), திருவல்லிக்கேணியில் தங்கியிருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். இவர் போட்டியில் பெசண்ட் நகர் சென்று திரும்பும் இடத்தில் சுருண்டு விழுந்தார். அவருக்கு உடனே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் சந்தோஷ்.
இந்த மாணவரின் இறப்பை ஈடுகட்ட முடியாவிட்டாலும், அவருடைய தந்தை முருகேசனிடம் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார் கிவ்லைப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேகர் ஜெ. மனோகரன்.
































