சீனம் சென்று வந்தேன்
வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
சீனர்களைப் பற்றி எனக்கு ஏற்கனவே பிரமிப்புகள் உண்டு. சீனர்களை நான் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தது, என் முதல் சிங்கப்பூர் (1978) பயணத்தின்போதுதான். பிறகு மலேசியப் பயணங்களின்போது பல புதிய விஷயங்களை உணர்ந்தேன்.
குடியேறி வாழ்பவர்களின் கலாசாரத்தைவிட, சீன மண்ணிலே சந்தித்த சீனர்களின் கலாசாரத்தில் மிகுதியான அழுத்தம் இருப்பதை உணர்ந்தேன். இந்தியாவில் தாயகத்தில் வசிக்கும் இந்தியர்களைவிட வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உழைப்பாலும் தங்கள் தனிப்பட்ட பழக்க வழக்கங்களாலும் ஒரு படி உயர்ந்தே நிற்கிறார்கள்.
ஆனால், சீனர்களைப் பொறுத்தவரை தாயகச் சீனர்களே மற்ற நாடுகளில் வாழும் சீனர்களைவிட ஒருபடி மேலே இருக்கிறார்கள் என்பது என் கணிப்பு. இதைப் பற்றி மாற்றுக் கருத்து உடையவர்களிடம் நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்.
சீனாவின் விசாவைப் பெற்றுவிட்டால் சீனர்களின் எந்தப் பகுதிக்கும் சென்றுவிடலாம் என்று பொருளல்ல. இந்திய விசாவைப் பெற்றுவிட்டால் அதன்பிறகு சிறப்பு விசா, தனி விசா என்றெல்லாம் எதுவும் கிடையாது.
ஆனால் சீனாவைப் பொறுத்தவரை சில கட்டுப்பாடுகளை இன்னமும் தளர்த்தாமல் இருக்கிறார்கள். உதாரணமாக ஜுஹாய், ஷென்ஜென், சியாமென் போன்ற பகுதிகளுக்கு நான் செல்ல முயன்றபோது உதை விழும் என்பது போல் பார்த்தார்கள்.
இதற்கு மினிஸ்ட்ரி ஆப் பப்ளிக் செக்யூரிட்டி எனும் பிரிவிடம் சிறப்பு அனுமதி வேறு பெற வேண்டுமாம். இதற்கான சம்பிரதாயங்களும் நடைமுறைகளும் கடுமையாக இருந்ததால் இந்த எண்ணத்தைக் கைவிட்டேன். மேலும் நான் பத்திரிகையாளர் என்பதால் என்னை ஏதோ ஓர் உளவாளியைப் போல் சந்தேகித்தார்கள்.
சீனா, ஊடகத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. எவன் என்ன எழுதினால் நமக்கென்ன என்கிற எருமைத் தோல் உணர்வு இங்கு இல்லை. இவன் என்ன எழுதி வைப்பானோ, அதன் விளைவு என்ன ஆகுமோ என்று அலறுகிறது சீன அரசு. நான் குறித்த இந்த மூன்று பகுதிகளும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாம்.
அட, இவை என்ன இராணுவக் கோட்டைகளா? சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குள் நுழைந்து நான் என்ன இல்லாததும் பொல்லாததுமா எழுதிவிடப் போகிறேன். ஏன் இவ்வளவு முன்னெச்சரிக்கை? ரொம்பத்தான் அதிசயம் பண்ணுகிறார்கள் என்கிற சலிப்பு உணர்வே எனக்குள் எழுந்தது.
சீன அரசு இதற்கு ஏராளமான விளக்கங்களை வைத்திருக்கலாம். ஆனால் மொழிப் பிரச்னை பெரிதாக இருப்பதால் நான் உள்ளுக்குள் போய்க் குடைய விரும்பவில்லை. சீன வெளியுறவுத் துறை எனக்கு விளக்கமளிப்பதுபோல் ஒரு கையேட்டை என் வசம் தந்தது.
அதில் சீனாவைச் சுற்றிப் பார்க்க வந்தால் அதை மட்டுமே செய்ய வேண்டும். வேலையில் சேர்வது; கல்வி நிறுவனங்களில் சேர்வது; பகுதி நேரமாகப் பணியாற்றுவது; பத்திரிகைக்காகப் பேட்டி எடுப்பது போன்ற வேலைகளைச் செய்தால் வாலை ஒட்ட நறுக்கிவிடுவோம் நறுக்கி என்று மிரட்டுவதுபோல் சில விதிகள் காணப்பட்டன.
இவர்கள் செய்தாலும் செய்வார்கள். சொந்த நாட்டு மக்களையே கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இவர்கள் சுற்றுலாப் பயணியை என்ன பாடுபடுத்தமாட்டார்கள் என்று எண்ணத் தோன்றியது.
ஓட்டுநர் உரிமத்தைப் பொறுத்தவரை சில சலுகைகள் உண்டு. வாகனம் ஓட்ட விரும்பியபோது இந்திய லைசன்ஸ் உண்டா? சரி அனுமதிக்கிறோம் என்றார்கள்.
சீனாவிற்குள் நமது வாகனத்தை எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட பகுதிகள் முழுக்க வலம் வரலாம். தடையில்லை. தங்கம் வெள்ளி ஆகிய ஆபரணங்கள் என்றால் 6 பவுன்தான் எடுத்து வரலாம். விலை மிகுந்த கலைப்பொருள்களைக் கொண்டு வர நேர்ந்தால் இதைச் சொந்த நாட்டில் வாங்கியதற்கான இரசீது, ஆதாரம் காட்டப்பட வேண்டும். இந்த இரசீதை பிப்பிள்ஸ் பேங்க் ஆப் சைனாவிடம் ஒப்படைக்க வேண்டுமாம்.வங்கிக்கும் கலைப்பொருள் இரசீதிற்கும் என்ன சம்பந்தம்? புரியாத விதிதான் போங்கள்.
நல்லவேளையாய் என்னிடம் 6 சவரன் நகையெல்லாம் இல்லை. நம் பெண்கள் என்றால் பலர் ஆறு சவரன்களுக்குமேல் போட்டிருப்பார்களே? இவர்களுக்கு இந்த விதி பொருந்துமா?
உலக அளவில் பெண்கள் எவரும் இந்திய பெண்களைப் போல் நகைகளை அணிவது இல்லை. வளைகுடாப் பெண்கள் மட்டும் விதிவிலக்கு. இவர்கள் இந்தியப் பெண்களைப் போல் பல மடங்கு நகைகளை அணியும் பழக்கம் உள்ளவர்கள். இவர்களெல்லாம் இந்நாட்டிற்கு வந்தால் என்ன ஆகும். விதிகளை வளைப்பார்களா? மாட்டார்களா? யாரிடம்தான் கேட்பது? யாருடன் பேசித் தெரிந்து கொள்வது?
ஏய் உனக்கு இவையெல்லாம் தேவையற்ற வேலைகள் என்று என் உள்மனம் என்னை அடக்கியது. 5000 டாலர்கள் வரை உல்லாசப் பயணிகள் கொண்டு வரலாம். இதற்குமேல் என்றால் சுங்கப் பிரிவில் அறிவித்துவிட வேண்டும். சீன நோட்டுகளில் 6000 மட்டும் வெளியே எடுத்துச் செல்லலாம். இதற்குமேல் எடுத்துச் சென்றால் பிடித்துக் கொள்வார்களாம்.
சீனாவிலிருந்து வெளியே போகக்கூடாத பொருள்களின் பட்டியலும் உண்டு. உதாரணமாகச் சீனாவில் தயாராகிய மூலிகை மருந்துகளை நம் நாட்டிற்கு எடுத்து வர முடியாது. பிடித்தால் அம்பேல்தான். மூலிகை இரகசியங்கள் வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடோ? தெரியவில்லை.
ஆனால் சீனாவில் எங்குப் பார்த்தாலும் மூலிகைக் கடைகள் கவர்ச்சிகரமான பாட்டில்களில் அடைத்து ஏகப்பட்ட விளக்குகளால் அலங்கரித்து அட்டகாசமாக விற்கிறார்கள். வேறு எதற்கும் வேண்டாம். சளி இருமலுக்கு நல்ல மருந்து இருந்தால் கொடுங்கள் என்று கேட்டு வாங்க ஆசைப்பட்டு, நம்ம கெட்டநேரம் சோதித்து மாட்டிக் கொண்டால் என்னாவது? என்பதால் என் ஆவலை அடக்கிக் கொண்டேன்.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































