Friday, 29 Aug 2008

2008/08/29 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எம்.சச்சிதானந்தன், நெமிலி.

சாதாரண மனிதன் நிலவுக்குப் போக என்ன தகுதிகள் வேண்டும்?

விண்வெளி பற்றியும், விண்வெளி ஓடம் பற்றியும் ஓரளாவது அறிவு! அப்புறம் உங்களின் ஏழு பிறப்புக்குமான சொத்து! இவை இரண்டும் இருந்தால் நிலவில் நீங்கள் இரண்டு கால்களையும் வைக்கலாம்.இல்லாவிடில்,இங்கே நிலவின் மீது கண்தான் வைக்க முடியும்.

ஆர்.ராஜா, திருக்கழுக்குன்றம்

ரேடியோ மங்கைகளின் குரல்கள் நன்றாக இருப்பது போல்,அவர்களின் முக அழகும் நன்றாக இருக்குமா?

அவர்களின் அகஅழகைப் பாருங்கள்! ரொம்பத்தான் அழகாக இருந்தால் தொலைக்காட்சி வாய்ப்புகள் எக்கியிருக்குமே!

ஏ.கருணாகரன், பனப்பாக்கம்.

அகமதாபாத் குண்டு வெடிப்பிற்குக் காரணமானவர்கள் பிடிபட்டது ஆறுதலாக இல்லை?

நிச்சயமாக சிமி (SIMI) எனும் புற்றுநோய் இயக்கத்தின் வளர்ச்சிக்கு வீசப்பட்ட முதல் ரேடியக் கதிர்வீச்சு இது. இவர்கள் சிக்கியிராவிட்டால் உளவுத்துறைக்கும் காவல்துறைக்கும் மாறாக் களங்கம் ஏற்பட்டிருக்கும். சிமி ஒரு விஷ இயக்கம் என்பதை உச்சநீதிமன்றமும் அண்மையில் உணர்ந்து அதன் செயல்பாட்டை நிறுத்தி வைத்தது சரிதான் என்ற கருத்து இக்கைதுகள் மூலம் வலுப்பெற்றுவிட்டது. நம்மைச் சுற்றிய நாடுகள் தீவிரவாதிகளைச் சுட்டு அழிக்கின்றன. நாம் மயிலிறகால் தடவிக் கொடுக்கிறோம். பேட்டை ரவுடிகளைக்கூட என்கவுண்டர்களால் கதை முடிக்கிறது காவல்துறை! எத்தகைய முரண்பாடு!

எஸ்.ரமேஷ், குரோம்பேட்டை.

ஊதாரிக்கும் உலோபிக்கும் என்ன வித்தியாசம்?

ஊதாரி, அவனது வாரிசைக் கொள்ளையடிக்கிறான். உலோபி தன்னையே கொள்ளையடிக்கிறான். எல்லாம் கொள்ளையடிக்கும் காலகட்டத்தில்தான் வித்தியாசம்!.

டி.துளசிராம், சென்னை-11.

மனிதநேயம் என்ன விலை?

இன்றையப் பங்குச் சந்தையைப் போலவும், தங்கத்தைப் போலவும் இதன் மதிப்பு ஒரு நிலையில் இல்லை.

ஆர்.சிதம்பரம், மயிலாடுதுறை.

இன்னும் சில ஆண்டுகளில் செல்போனின் வளர்ச்சி எப்படியிருக்கும்?

ஆண், பெண் வித்தியாசமின்றி எல்லோர் காதுகளிலும் அவை கவசகுண்டலங்களாய் இருக்கும்.

ஜே.குமரேசன், தாமரைப்பக்கம்.

இந்தியா வளமையை நோக்கி வளர்கிறதா?

ஒரு சாரார் மட்டும் ஏகமாய் வளர்கிறார்கள். வறுமைக் கோட்டின் நீளமோ ஒரு புறம் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. பத்து சதவிகிதமாக இருந்த வறுமைக் கோட்டு மக்களின் எண்ணிக்கை 22 சதவிகிதமாக உயர்ந்து நிற்கிறது. வறுமைக்கு அரசை மட்டுமே குறை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த மண்ணின் வறுமை என்பது அவரவர்களே விதித்துக் கொள்வது. உழைக்கத் தயாராக இருப்பவனுக்கும் உற்சாகக்காரனுக்கும் இந்த மண் நல்ல வாய்ப்புகளைக் கதவைத் திறந்து வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

எல்.ஜெயலக்ஷ்மி, சென்னை-118.

தங்கம் விலை திடீரெனக் குறைந்து வந்தது பற்றி?

எண்ணெய் வழுக்கினால் எல்லாம் வழுக்குமா?

எஸ்.நைம்பாஷா, சென்னை-72.

நடிகைகளின் உடலழகை வர்ணித்துக் கேட்கும் கேள்விகளுக்கு விடை தருவீர்களா?

மனைவி வெளிநாட்டில். எனவே தாராளமாய் கேளுங்கள்.

ஏ.கண்ணன், மும்பை.

எத்தனை திட்டினாலும் பொறுத்துக் கொண்டு எதிர்த்துப் பேசாமல் வாய்பொத்தி வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஆண்களைப் பற்றி?

விரிவான வாக்கியம் எதற்கு? திருமணமான ஆண்களைப் பற்றி என்று சுருக்கமாகக் கேட்டிருக்கலாமே?

சி.விஜய், சென்னை-50.

ஒரு கட்சியைப் பிடிக்காமல் இன்னொரு கட்சிக்குப் போகும் அரசியல்வாதியைப் பற்றி?

வாணலிக்குப் பயந்து அடுப்பில் விழுந்த கதை! அதிலும் தீய்ந்தால்தான் தெரியும்!

டி.ராஜ்குமார், வண்டலூர்.

மாவோயிஸ்ட் புரட்சியாளர் பிரசந்தா நேபாளப் பிரதமராகியிருப்பது பற்றி?

திருடன் கையில் சாவி கொடுத்த கதைதான். என்ன சாதிக்கிறார் என்று பார்ப்போம். வாய் கிழியப் பேசிய அஸ்ஸாம் மாணவர் தலைவர்கள் பதவியில் அமர்ந்ததும் படுதோல்விகளையே கண்டார்கள். பிரசந்தா வாய்ச்சொல் வீரரா, சாதனையாளரா என்பது முதல் வருடத்திலேயே தெரிந்துவிடும்!

என்.சூர்யா, சென்னை-33.

கொலை, கொள்ளைகள் இன்று?

இதற்காகவே தினசரிகள் நிரந்தர இடம் ஒதுக்கிவிட்டன என்று தோன்றுகிறது.

கே.சுதாகர், மன்னார்குடி.

ரிமிக்ஸ் பாடல்களுக்கு எதிர்ப்பு வர ஆரம்பிக்கிறதே?

இதுவரை ஒன்றுகூட மூலத்தை மிஞ்சவில்லை என்பதால், நானும் இந்த எதிர்ப்பு அணியில் சேர்ந்துவிடலாமா என்று பார்க்கிறேன்.

எஸ்.குரு, காட்பாடி.

வரும் தேர்தலுக்குப் பின் திடீர் கட்சிகள்?

விநாயகர் கோயில்களில் சிதறு தேங்காய்களைப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திராவிட்டால் இப்போதே பார்த்துக் கொள்ளுங்கள்.

பா.விஜயராணி, வேளச்சேரி

சென்னை நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகரும் காவல்நிலையங்கள் நல்ல திட்டம்தானே?

நகரக் காவல்துறை ஆணையராக விஜயகுமார் (வீரப்பன் புகழ்) இருந்தபோதே அறிமுகமான திட்டம் இது. சேகர் இதைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துவிட்டார். அருமையான திட்டம் இது. சோடா வாட்டர் கதையாக ஆகிவிடக் கூடாது என்பதே நம் அக்கறை. சோடா உடைத்ததுமே குப்பென்று வாயு வரும். சில நிமிடங்களில் சிறு நீர்க்குமிழிகள் வரும். அப்புறம் பச்சைத் தண்ணீராகிவிடும். சென்னை காவல்துறைக்கு நம் பாராட்டுகளைச் சொல்லி, வற்றாத ஊற்றாக இத்திட்டம் செயல்பட வாழ்த்துவோம்.

பி.மணிகண்டன, விழுப்புரம்.

டாலர் விலை உயர்வால் தொழில் நுட்பப் பூங்கா ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாமே?

பல வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் குறைக்கத்தான் தெரியும். உயர்த்தத் தெரியாது!

ஜே.சுரேந்தர், ஈரோடு.

ஜூனியரே வாஸ்து தொழிலில் பணம் குவியுமா?

அதைச் செய்பவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? எல்லோரும் கொழுக்கட்டை மாதிரி இருப்பார்கள். வாஸ்துவே பணத்திற்கான ஒரு வஸ்துதான்!

ஆர்.மோகன், குன்றத்தூர்.

கலைஞர் ஆட்சியில் மீண்டும் லாட்டரி வர வாய்ப்பு உள்ளதா?

லாட்டரிக்குத் தமிழகத்தில் இனி அதிர்ஷ்டமில்லை.

சரபோஜி, தஞ்சாவூர்.

உங்களுக்குப் பிடித்த நடிகை யார், உண்மையைச் சொல்லுங்கள்?

பூஜா. பெரிய வெற்றிகளையெல்லாம் குவிக்காதவர், கவர்ச்சியில் கவனம் செலுத்தாதவர். பெரிய குணச்சித்திர நடிகையெல்லாம் அல்லர். தமிழை ஒழுங்காகப் பேசும் பெங்களூர்காரர். இலங்கைத தமிழ்ப் பெண் என்று நினைக்கிறேன். நன்றாக வர வேண்டியவர் அவசரப்பட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நீதிபதியாக அமர்ந்துவிட்டார். பெரிய திரையில் பிடிப்பு இழந்தவர்களே சின்னத் திரைக்கு வருகிறார்கள்./h4>

எஸ்.மணி, காஞ்சிபுரம்.

120 கோடி செலவில் உருவாக இருக்கும் கோட்டூர்புர நூலகம் பற்றி…?

நீங்களே எதிர்மறையாகச் சிந்திக்கலாமா என்று கேட்காதீர்கள். அடுத்து ஆட்சிக்கு வருபவரின் கையில்தான் இதன் தலைவிதி இருக்கிறது. நல்ல தமிழ் உணர்வும் எழுத்துப் பற்றும் நூல் நேசமும் கொண்ட ஒருவர் தமிழக முதல்வராக வாய்த்தது தமிழகம் செய்த பேறு. ஆசிய அளவில் உயரம் பெறும்படி பேச வைத்த தமிழக அரசு வாழ்க!

எம்.குப்புசாமி, அம்பத்தூர்.

தங்கமகன் அபினவ் பிந்த்ரா கிரிக்கெட்டைத் தாக்குவது போல் தெரிகிறதே?

தாக்குவது என்பது வேறு இரகம்.இவரது பார்வையை ஆதங்கத்தின் இரகத்தில் சேர்ப்பதே பொருத்தம். கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வெல்வது மட்டும் நம் இலட்சியமாக இருக்கக் கூடாது. ஒலிம்பிக்கில் தங்கங்களைக் குவிப்பதுதான் உலகில் இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் என்கிறார். அபினவின் தங்கம் பதவியில் இருப்பவர்களையும், விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தையும் இனி ஒலிம்பிக்கின் மீது பார்வையைத் திசை திருப்பும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

கே.திருஞானம், திண்டிவனம்.

குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டித்திருந்தால் அடுத்தடுத்துக் குற்றவாளிகள் உருவாகியிருப்பார்களா?

இந்தியாவின் சட்டப் பல்கலைக்கழகங்கள், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர் என் எல்லாத் தரப்புக்குமே இந்த ஒரு கேள்வி மூலமே நீங்கள் ஆப்பு வைத்திருக்கிறீர்கள். இது உங்களுக்கே அடுக்காது.உண்மையில் நீங்கள் தசாவதாரம் படத்தில் வரும் கிருமிகளைவிடப் பயங்கரமானவர்.

ஆர்.பாபு, மூலக்கடை.

மனைவிக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் மது அருந்துகிறவர்களைப் பற்றி?

அப்படியாவது மனைவியை விலக்கிவைத்துவிட முடியாதா என்கிற எதிர்பார்ப்புதான்!

22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


Leave a Reply