அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யுங்கள்:
செக்ஸ் சாமியார் பிரேமானந்தா மனு

சென்னை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று ஆயுள் தண்டனை கைதியான பிரேமானந்தா சாமியார், அவரது சீடர் கமலானந்தா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் பிரேமானந்தா சாமியார் ஆசிரமம் நடத்திவந்தார். இந்த ஆசிரமத்தில் இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
பிரேமானந்தா உள்பட பலர்மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின் இறுதியில் பிரேமானந்தா மற்றும் அவரது சீடர் கமலானந்தா இருவருக்கும் இரட்டை ஆயுள்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. பிரேமானந்தா கடலூர் சிறையிலும், கமலானந்தா உள்பட மற்றும் சிலரும் திருச்சி சிறையில் தங்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா பிறந்தநாள் வருவதையொட்டி தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று பிரேமானந்தாவும் கமலானந்தாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களுடைய மனுவில், ‘1994ஆம் ஆண்டு நாங்கள் கைது செய்யப்பட்டோம். 1997 ஆகஸ்டு மாதம் 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படட்டது. இதுவரை நாங்கள் ஜாமீனில் விடுதலை ஆகவில்லை. விசாரணை காலத்தையும் தாண்டி 19 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறையில் இருந்துள்ளோம். இந்த வழக்கில் தீர்ப்பளித்த புதுக்கோட்டை செசன்சு நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளின் தண்டனைக் குறைப்பு சலுகை எங்களுக்குப் பொருந்தாது என்று தெரிவித்துள்ளது.
அண்ணாபிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி பல ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. புதுக்கோட்டை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக இந்த சலுகை எங்களுக்கு மறுக்கப்படுகிறது.
கைதிகளின் தண்டனை குறைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் தான் உள்ளது. நீதிமன்ற உத்தரவால் இந்த அதிகாரத்தில் குறுக்கிட முடியாது. தண்டனை குறைப்பு செய்து எங்களை விடுதலை செய்யக்கூடாது என்ற புதுக்கோட்டை செசன்சு நீதிமன்ற தீர்ப்பு பாரபட்சமானது. எனவே எங்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
இந்த மனுக்கள் நிதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், பெரிய கருப்பையா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் காவல்துறை இயக்குனர், திருச்சி, கடலூர் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Posts Title































