Tuesday, 26 Aug 2008
பிரஜா ராஜ்யம் (மக்கள் ஆட்சி) கட்சி தொடங்கினார் சிரஞ்சீவி
திருப்பதி: திருப்பதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரமாண்ட விழாவில், லட்சகணக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்துக்கு இடையே தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி (53) தனது புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சியின் பெயரை அறிவித்து, கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
ரசிகர்களின் கைதட்டலுக்கு இடையே பிரஜா ராஜ்யம் (மக்கள் ஆட்சி) என்று கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். அத்துடன் பச்சை, வெள்ளை நிறத்தில் நடுவில் சிவந்த சூரியன் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.
சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்குவார் என்று வந்துக்கொண்டிருந்த ஹேஸ்யங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிரஞ்சீவி, 26ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவேன் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி திருப்பதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள செவ்வாய்க்கிழமை திருப்பதி வந்த அவர் முதலில் பெருமாளை தரிசனம் செய்தார்.
பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்ற மைதானத்துக்கு மாலை வந்தார். அவர் மேடையில் தோன்றிதும் அவருடைய ரசிகர்க எழுப்பிய ஆரவாரம் ஏழுமலைகளிலும் ஒலித்து சிதறியது. ராக்கெட் மேலே எழும்பும்போது கவுண்டடெளன் சொல்வதுப்போல் 5 4 3 2 1 என்று கூறி பிரஜா ராஜ்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார் சிரஞ்சீவி.
பின்னர் தனது முதல் அரசியல் பேச்சை தொடங்கினார் சிரஞ்சீவி.
அவர் தனது பேச்சில், மாற்றமும் சமூகநீதியும் தமது கட்சியின் தாரக மந்திரம் என்று கூறினார்.
சமூக நீதியை நிலைநாட்டுவதும்,- அரசியலில் லஞ்சத்தை ஒழிப்பதும் தமது கட்சியின் முக்கியக் கொள்கைகளாக அவர் அறிவித்தார்.
விவசாயத்தை மேன்மையடையச் செய்யவும், அடிப்படை சுகாதாரம், கல்வி, தொழிலாளர் நலன், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது போன்றவற்றிற்கு பிரஜா ராஜ்யம் முன்னுரிமை அளிக்கும் என்றார்.
மது விற்பனையை ஒழுங்குப்படுத்தவும், தெலுங்கானா தனி மாநிலம், நக்சல் பிரச்னை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை அலசி ஆராய்ந்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ஏழைகளின் முகத்தில் புன்னகை மலரச் செய்வதே தனது லட்சியம் என்றும், அதுவரை தான் ஓயப்பபோவதில்லை என்றும் அவர் சபதமிட்டார்.
சிரஞ்சீவியின் புதிய கட்சித் தொடக்க விழாவில் கிட்டத்தட்ட 10 லட்சம் தொண்டர்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் வரை காயமடைந்தனர். கட்டுக்கடங்காத ரசிகர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
































