Friday, 22 Aug 2008

2008/08/22 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

பி.ராஜா, சென்னை-60.

சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் கலப்படப் பாலைக் கைப்பற்றி கூவத்தில் ஊற்றி வருவது பற்றி?

என்ன நினைச்சீங்க? ஒரே நாளில் 2,420 லிட்டர் கலப்படப் பாலைக் கூவத்தில் ஊற்றி அழித்திருக்கிறார்கள். நிலைமை இப்படியே போனால், கூடிய விரைவில் கூவம் ஒரு பாற்கடல்தான்!


ஜி.சுந்தர்ராஜன், கும்பகோணம்.

தலைமைச் செயலக ஊழியர்களுக்குக் கட்டாய மருத்துவப் பரிசோதனை வேண்டுமென முதல்வர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறாரே?

தன்னைப் போலவே அதிக வேலைப்பளு, தன்னைப் போலவே அதிக மன அழுத்தம் இந்தத் தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் உண்டு என்பதாக கலைஞர் நினைக்கிறாரா? அல்லது வேலைகள் சரிவர நடக்காததால் இந்த நடவடிக்கையோ என்னவோ?


எஸ்.வெங்கட்ராமன், தூத்துக்குடி.

அபிநவ் பிந்த்ரா?

பதினொன்றிற்கெல்லாம் நண்பர் குறுஞ்செய்தி மூலம் தங்கப்பதக்கம் சமாசாரத்தைத் தெரியப்படுத்தினார். யோவ் விளையாடாதே! வதந்திகளைப் பரப்பாதே என்று கடிந்து கொள்ள ஆரம்பித்தேன். உண்மைதான் என்றார். யார் விக்ரம் ரத்தோரா வாங்கினார் என்றேன். இல்லை பிந்த்ரா என்றார். மகிழ்வில் கண்ணீரே வந்துவிட்டது. உலகிலேயே அதிகத் தங்கத்தை கையிருப்பில் கொண்டுள்ள இந்த மாபெரும் தேசம் 28 வருடங்களாகத் தங்கத்தையே பார்க்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு வயிற்றில் பால் வார்த்துவிட்டார் பிந்த்ரா. டெண்டுல்கரை இடப்பக்கம் ஒதுக்குங்கள். விஸ்வநாதன் ஆனந்தை வலப்பக்கம் ஒதுக்குங்கள். மையத்தில் அபிநவ் பிந்த்ராவுக்கு நாற்காலி போடுங்கள்.


எஸ்.அசோகன், பாண்டிச்சேரி.

தமிழில் எம்.பி.பி.எஸ்., பட்ட வகுப்பு வரப்போகிறதாமே?

‘எதிலும் தமிழ்!’ என்பது எனக்கு ஏற்புடையதே! ஆனால் உலகை வெற்றி கொள்ளவும், கைக் கொள்ளவும் தமிழ் மட்டும் போதாது.


ஆர்.நந்தகுமார், திருவான்மியூர்.

தமிழ்நாட்டில் அரசுக் கலைக் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்படுவது பற்றி?

அரசுக்கு இது கெளரவமில்லை! வேலை கிடைக்காமல் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். அவர்களையும் இந்த அரசு நெறிப்படுத்த வேண்டும். சாய்வு நாற்காலிகளுக்கு இருக்கிற மனசு, கைப்பிடி நாற்காலிகளுக்கு இல்லையே என்பதை நினைத்தால் ஏக்கமாக இருக்கிறது.


கே. முருகானந்தம், திருவேற்காடு.

எக்காரணம் கொண்டும் சென்னை கலைவாணர் அரங்கத்தை இடிக்கமாட்டோம் என்கிறாரே கலைஞர்?

‘அதை விரிவாக்கி அழகுபடுத்துவோம்’ என்றும் சொல்லியிருக்கிறார். விரிவாக்கி என்றாலே இப்போதைய கட்டடம் ஒரு வழி ஆகப்போகிறது என்று அர்த்தம். இதற்குத்தான் எல்லோருக்கும் ‘செம்மொழி’ தெரிய வேண்டும் என்பது.


ப.சத்தியமூர்த்தி, சேலம்.

பெட்ரோல் உயர்வை மாதாமாதம் செய்யலாம் என்கிற புதிய பரிந்துரை பற்றி?

மெதுவாக விஷம் (Slow poison) ஏற்றுவோம். ஒரேயடியாக வேண்டாம் என்கிற முடிவிற்கு ஒப்பானது. தேசம் பெட்ரோலிய விஷயத்தில் பற்றி எரிகிறது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்திற்கு விற்று மூடப்படும் அபாயத்தில் இருக்கின்றன. (முதலில் உயிர்விட்டது ரிலையன்ஸ் பெட்ரோல் நிறுவனம்) வேறு வழியற்ற முடிவு. உலக அளவில் எண்ணெய்ப் பீப்பாய்களின் விலை சற்றே குறைய ஆரம்பித்திருக்கிறது என்பதால் கைவிரல்களைக் கோர்த்தபடி காத்திருக்கிறது மத்திய அரசு!


எல்.ஜெயலக்ஷ்மி, சென்னை-118.

தங்கம் விலை திடீரெனக் குறைந்து வந்தது பற்றி?

எண்ணெய் வழுக்கினால் எல்லாம் வழுக்குமா?


டி.ஆரோக்கியம், பெருங்குடி.

குசேலன் படம் வெற்றியா?

படத் தயாரிப்பாளர்கள் குபேரர்களாகிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள்தாம் பாவம் குசேலர்களாகிப் போனார்கள்!


எம்.கண்ணன், பொன்னேரி.

தமிழகப் பள்ளிகளில் சத்துணவில் வாழைப்பழம் பற்றி?

இதன்மூலம் தமிழக மாணவர்கள் வெறும் முட்டை மட்டுமே வாங்குகிறார்கள் என்பது அடிபட்டுப் போகும்.


பி.பெருமாள், சேலம்.

இரு வேறு கொள்கைகளை உடைய கம்யூனிஸ்டுகள் ஒன்று சேர்ந்துக்கொண்டது எப்படி?

உனக்கும் எனக்கும் ஒரே எதிரி என்றால், நாம் இருவரும் நண்பர்கள் என்கிற வறட்டுக் கொள்கைதான். மத்தியில் உறுதியற்ற அரசியல் தன்மையை உருவாக்க எண்ணிய இவர்கள் மீசையில் மண்ணை ஒட்டிக் கொண்டதுடன் மூக்கையும் உடைத்துக் கொண்டார்கள். இப்போது தமிழக அரசின்மீது கைவைக்கும் விஷயத்தில் கைகோர்த்திருக்கிறார்கள். பலிக்காது இவர்களது கனவு.


எஸ்.நாகேந்திரன், மெய்யூர்.

புகையில்லா இந்தியா உருவாக வேண்டும் என்கிறாரே அன்புமணி இராமதாஸ்?

முதலில் பகையில்லாப் பா.ம.க.வை உருவாக்கச் சொல்லுங்கள்.


ஆர்.லோகேந்திரன், வந்தவாசி.

நம்பிக்கை வாக்கெடுப்பிற்குப் பின் காங்கிரஸ்?

அரசியல் கட்சிகளுக்கு ஒலிம்பிக்கில் எதுவும் போட்டியில்லையா? என்று கேட்காத குறையாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஏதோ இவர்களே தன்னிச்சையாய் ஜெயித்துவிட்ட மாதிரி!.


எஸ்.ராமு, வேலூர்.

சிபுசோரன் நிலக்கரித்துறை அமைச்சர் பதவி கேட்டாராமே?

முன்பு காங்கிரசார் இவர் மீது கரி பூசினார்கள் இல்லையா? அதிலிருந்தே திரும்பக் கரி பூச நினைக்கிறாரோ என்னவோ! நல்லவேளை முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு இதைவிட்டுவிட்டார் என்கிறார்கள்.


ஏ.வீராச்சாமி, மேட்டுப்பாளையம்.

தமிழக அமைச்சர் ராஜாவின் நீக்கம் எதைக் காட்டுகிறது?

ஏழை சொல்லும் இந்த ஆட்சியில் ஓர் அமைச்சரின் நாற்காலியை அசைத்துப் பார்க்கும் என்பதை. தங்கள் நிலத்தைப் பறிகொடுக்க விரும்பாத பழனிச்சாமியும் மலர்விழியும் ஓர் அமைச்சரையே எதிர்த்து மாநில அளவில் வெகுண்டு எழுந்த துணிச்சல் என்னை வியக்க வைக்கிறது. நமக்கென்னத்திற்குப் பெரிய இடத்துப் பொல்லாப்பு என்று பலரும் ஒதுங்குவதால்தான் ஆட்சியாளர்களின் தாதாத்தனங்கள் பெருத்துவிட்டன. நான்கு அமைச்சர்களின் மீது வந்த புகார்களைக் கண்டுகொள்ளாமல் விடாமல் தீர விசாரித்து நடவடிக்கை எடுத்த நம் முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


எம்.கல்யாணசுந்தரம், அரக்கோணம்.

ஒகேனக்கல் விஷயத்தில் எடியூரப்பா இறங்கி வந்திருக்கிறாரே?

என்னத்த இறங்கி வந்தார் போங்க. கூட்டாக ஆய்வு செய்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என்கிறார் புதிதாக. ஒகேனக்கல் தமிழகத்திற்குச் சொந்தமான பகுதி. இதில் ஆய்வு செய்வது என்பது குதர்க்கமான அணுகுமுறை. இந்தப் பேச்சிற்கே இடமில்லை. கர்நாடகத் தேர்தல் முடியட்டும்; ஒகேனக்கல் பிரச்னையைப் பேசலாம் என்றார் நம் முதல்வர். இவர் அமைதியாக இருப்பதால் எடியூரப்பா எம்பிக் குதிக்கிறார், வேறென்ன?


பீதாம்பரம், கொடுங்கையூர்.

கொள்ளைச் செய்திகளைப் படிக்கும்போது என்ன தோன்றும்?

சாதாரண மனிதர்கள் வீட்டில் கூடப் பல இலட்சம் கொள்ளை என்று அறிய நேரிடும்போது லாக்கரிலும் வங்கியிலும் வைக்காமல் வீட்டில் குவித்து வைக்கும் இவர்களின் அறியாமையை எண்ணி இரங்கத் தோன்றும்.


கே. அப்துல்ஹமீது, திருநெல்வேலி.

தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் பற்றி இப்போது மட்டும் அதிகம் தெரிய வருவது ஏன்?

தும்பை (தலையை) விட்டு வாலைப் பிடிக்கிற காவல்துறையின் போக்குதான் காரணம். குஜராத், கர்நாடகச் சம்பவங்கள் தமிழகத்திலும் நிகழ்ந்துவிட்டால் என்ன செய்வது என்கிற ஞானோதயத்தில் தோண்ட ஆரம்பிக்க, சுரங்கங்களே அகப்பட ஆரம்பித்திருக்கின்றன! எலிகளைத் தேட ஆரம்பித்ததில் பெருச்சாளிகளே கிடைத்தது. காவல்துறையே எதிர்பாராத ஒன்று. இதே வேகம் தொடரட்டும்.


டி.அருள்அழகன், கன்னியாகுமரி.

வாரத்தின் சிறந்த தினம் புதன்தானாமே?

எவர் சொன்னார்கள்? உழைப்பாளிகள் வாரத்தின் ஆறு தினங்களும் அருமையான தினங்களே என்கிறார்கள். சோம்பல் முறிக்கிறவர்களோ ஞாயிறே ஒப்பற்ற தினமென்கிறார்கள். திங்கள் ஒரு மோசமான தினம் என்கிறார்கள் வாகன ஓட்டிகள். திங்களே சிறந்த வசூல் தினம் என்கிறார்கள் சில போக்குவரத்துக் காவலர்கள். சனிக்கிழமை அருமையான தினம் என்கிறார்கள் குடிகாரர்கள். வெள்ளிக்கிழமை ஒப்புயர்வற்ற தினம் என்கிறார்கள் பக்திமான்கள். என்னைப் பொறுத்தவரை புதன் சிறந்த தினம் அல்ல. இதழ் முடிக்கிற தினம். ஒரே டென்ஷன். ”புதனன்று உங்கள் முகம் பார்க்கச் சகிக்கவில்லை” என்று மனைவி உட்படச் சொல்வதுண்டு. தெளிவாக இருந்த உங்களை ரொம்பவும் குழப்பிவிட்டேன்.


ஆர்.லட்சுமி மீனா, ஹைதராபாத்.

சானியா உலகத் தர வரிசையில் மிகக் கீழே இறங்கிவிட்டாரே?

சானியா சோனியாகிப் போனார். பணமும், புகழும் வந்ததும் கவனங்கள் திசை திரும்பிவிடுமோ என்னவோ!


எஸ்.சையத், வாணியம்பாடி.

இலவச வண்ணத் தொலைக்காட்சியையும், கிலோ அரிசி இரண்டு ரூபாயையும் அறிவிக்காமல் இனி எந்த மாநிலமும் தேர்தலைச் சந்திக்க முடியாது என்கிறாரே, கருணாநிதி?

எப்போதுமே தமிழக விஷயங்களில் தி.மு.க.வினர் கில்லாடி! இப்போது இந்திய டெண்டர்களிலும் தி.மு.க.வினர் முன்னோடி!

15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


Leave a Reply