Monday, 18 Aug 2008
குசேலன் நஷ்டத்தை ஈடு செய்ய ரஜினிக்கு திரையரங்க உரிமையாளர்கள் வேண்டுகோள்

சென்னை: குசேலன் திரைப்படத் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு திரையரங்க உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்று குசேலன் திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி ஈடு செய்யவேண்டும் என்கிறது.
தீர்மான விவரம் வருமாறு:
ரஜினிகாந்த் நடித்த குசேலன் திரைப்படம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக அதிகபட்சமாக எம்.ஜி. (மினிமம் கேரண்டி) கொடுத்து திரையிடப்பட்டது. ரஜினி, திரைப்படம் முழுக்க வருகிறார் என்றும், ரஜினியின் கதாபாத்திரம் கெளரவ வேடம் அல்ல என்றும், மலையாள திரைப்படத்தில் இருந்து மாறுபட்டு கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டதால் குசேலன் திரைப்படத்திற்கு அதிக தொகை கொடுத்து திரையிட்டோம்.
ஆனால் குசேலனை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் வசூல் குறைந்து திரையரங்க உரிமையாளர்கள் அளவு கடந்த நஷ்டத்தை அடைந்துள்ளனர். தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் இருந்து நாங்கள் கொடுத்த தொகையை சதவீத அடிப்படையில் கணக்குவைத்து, எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தவிர்க்க எம்.ஜி. தொகையை டெபாசிட்டாக வைத்துக்கொண்டு, எங்கள் மீதி தொகையை திருப்பி அளிக்கவேண்டும் என்று கோருகிறோம்.
இந்த விஷயத்தில் மனிதநேயமுள்ள ரஜினிகாந்த் தலையிட்டு, எங்கள் நஷ்ட தொகையை பெற்றுத் தர வேண்டும்.
இந்த பிரச்னை சுமூகமாக முடியும் வரையில் கவிதாலயா மற்றும் செவன் ஆர்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கு தொழில்முறையில் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.









































