Friday, 15 Aug 2008
மதத்தின் பெயரால் மக்களை பிரிக்காதீர்கள்:
பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள்

டெல்லி: மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது நமது நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
62 ஆவது சுதந்திர தினமான நேற்று டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர், நாட்டுமக்களுக்காக உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார். மேலும் அவருடைய உரையில்,
”இந்தியாவின் மதசார்பின்மைக்கு அமர்நாத் கோயில்தான் சிறந்த உதாரணம். ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் இருந்தால்தான் அக்கோயிலுக்குச் செல்லும் யாத்தீரிகர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்துதர முடியும்.
மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க நினைத்தால் காஷ்மீர் நிலைமை இன்னும் மோசமாகும். இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஊறு நேரும். அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
மற்ற பகுதிகளைப் போல் காஷ்மீரும் வளர்ச்சியடைய வேண்டுமானால் அங்கு அமைதியை ஏற்படுத்தவேண்டும். அதற்குத் தேவையான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீரில் உள்கட்டமைப்பு வசதி, கல்வி போன்றவற்றில் அரசு முதலீட்டை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் அப்பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, முன்னேற்ற உதவலாம்.
தீவிரவாதிகளும், அவர்களுக்குத் தூது போகிறவர்களும் இந்திய மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு எதிரிகள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறவுக்கும், பிராந்திய அமைதிக்கும் அவர்கள்தான் எதிரிகள். நாம் அவர்களைத் தோற்கடிக்கவேண்டும்.
இந்திய பாகிஸ்தான் உறவைச் சீரமைக்கும் முயற்சிக்கு காபூல் நகர இந்தியத் தூதரகம் மீதான தாக்குதல் பெரும் தடையாக உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவின் கவலையையும் அதிருப்தியையும் பாகிஸ்தான் அரசிடம் கூறியுள்ளோம்” என்றார்.









































