Tuesday, 12 Aug 2008

Amernath Temple Land issue: Violence up in J&K

அமர்நாத் கோயில் நில விவகாரம்: காஷ்மீரில் 13 பேர் பலி:
பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி அவசரக் கூட்டம்

ஸ்ரீநகர்: அமர்நாத் கோயில் விவகாரம் தொடர்பாக காஷ்மீரில் வன்முறை தொடர்கிறது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நேற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உள்பட 13 பேர் மாண்டனர். 80 பேர் காயமடைந்தனர். காஷ்மீர் முழுவதும் கலவரம் பரவி வருவதால் அங்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அமர்நாத் கோயில் நில விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து நடக்கும் வன்முறையால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி பழ வியாபாரிகள் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்கு செல்லும் போராட்டத்தை நடத்தினர்.

ஸ்ரீநகர் உள்பட பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடந்தது. இதில் காவல்துறையினர் மீதும், அவர்களுடைய வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரக்காரர்களை விரட்ட காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஹரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் ஷேக் அப்துல் அஜீஸ் உள்பட 6 பேர் இறந்தனர்.

இதையடுத்து காஷ்மீரில் நேற்று பெரும் கலவரம் வெடித்தது. காஷ்மீர் முழுவதும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அரிபால் பகுதியில் காவல்துறையினர் சுட்டதில் 3 பேர் இறந்தனர். லஸ்ஜான் பகுதியில் ஒரு பெண் உள்பட 3 பேர் இறந்தனர். மேலும் ரைனாவாரி, பகேமதாப், ஜூன்மார், நாகாபால் பகுதிகளில் துப்பாக்கி சூட்டில் 5 பேர் இறந்தனர். இவ்விடங்களில் நடந்த துப்பாக்கி சூடுகளில் 100 பேர் வரை காயம் அடைந்தனர்.

காஷ்மீர் கலவரம் தொடர்வதையொட்டி இன்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அமர்நாத் நில விவகாரம் தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Posts Title


Leave a Reply