Monday, 11 Aug 2008

CM calls Left to work together

CM karunanidhi calls Left to work togetherஇணைந்து பணியாற்றுவோம்: இடதுசாரிகளுக்கு கருணாநிதி அழைப்பு

சென்னை: தமிழக மக்களின் நலன் கருதியாவது தி.மு.க தலைமையிலான கொள்கைக் கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் பிரிந்து செல்லக்கூடாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.

1957ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி ஆற்றிய உரை நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

”சேது சமுத்திரத் திட்டம் குறித்து நான் கடந்த 1971 ஆண்டு சட்டப்பேரவையில் வலியுறுத்தினேன். எப்பாடுபட்டாவது அந்தத் திட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றும்.

தமிழக மீனவர்களின் இன்னுயிரைக் காக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். கச்சத்தீவு குறித்து பல ஆண்டுகளுக்கு  முன்பிருந்தே தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் இங்குள்ளனர். இது தேர்தல் பயம் காட்ட அல்ல. நாங்கள் பயமுறுத்த மாட்டோம். பயப்படவும் மாட்டோம். யாருக்கும் ஏமாற்றம் அளிக்காத வகையில் இணைந்து பணியாற்றுவோம்.

நான் எந்தக் காலத்தில் இருந்து கம்யூனிஸ்டாக உள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். என்னைப் புரிந்துகொண்டிருப்பார்கள் என்பதை உணர்கிறேன்.

ஆனால் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியம். அவர்களுக்கு ஏமாற்றமளிக்காமல் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.

இடையிலே ஏதோ வந்துபோனது. அந்தமானில் நிலம் அசைந்தது என்றால் இங்கேயும் அசைகிறது. இது முடிந்த முடிவுகள் அல்ல.

ஆனால் தற்போது எந்தக் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். எந்தக் கருத்துக்கள் நம்மைப் பிணைத்தன. எதனால் நாம் ஒன்றுபட்டோம்.

எந்தக் கருத்துக்கள் தமிழகத்தில், இந்தியாவில் வளரவிடாமல் தடுக்க நாம் உறுதி பூண்டோம். பாபர் மசூதி பிரச்னையால் பா.ஜ.க.வின் கொடூரத்தைப் புரிந்துகொண்டோம். இதன்பிறகு நாம் எடுத்த நிலை என்ன? அந்த நிலையில் நாம் நிலையாக நிற்கப் போகிறோமா, இல்லையா? இதுகுறித்து தான் நாம் முடிவு செய்யவேண்டும்.

எனக்கு உரிமை இருந்தாலும் உங்களில் யாரையும் நான் கசக்கிப் பிழிய விரும்பவில்லை. அனைத்து மக்களையும் நாம் அரவணைத்துச் செல்லவேண்டும்.

வடக்கே உள்ள காங்கிரஸார் மீதான கோபத்தை இங்கேயுள்ள பீட்டர் அல்போன்ஸ் மீது காட்டலாமா? பீட்டர் நம்முடன் இருப்பவர்.

இது நமது தோழமை. நாம் அரும்பாடுபட்டு வளர்த்தது. இந்த தோழமை தியாக தீபம். இந்த தியாகச்சுடர் அணையாமல் காப்போம்” என்றார்.

பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக மாநில செயலாளர் என். வரதராஜன் ”11ஆவது திட்டக்காலத்திலும் சேதுத் திட்டம் நிறைவேற்றப்படாத நிலை உள்ளது. தடைகளை உடைத்து இத்திட்டத்தை நிறைவேற்றும்வரை நாங்கள் உங்களோடு இருப்போம்” என்று குறிப்பிட்டார்.

Related Posts Title


Leave a Reply