Thursday, 7 Aug 2008
ஆள் கடத்தல் வழக்கு எதிரொலி:
அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா நீக்கம்!
சென்னை: தமிழக அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த கைத்தறித் துறை சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
புகார்களைத் தொடர்ந்து பதவியை இழக்கும் இரண்டாவது அமைச்சர் இவர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சென்னிமலை சாலையில் உள்ள விவசாய நிலத்தை தனக்கு தருமாறு மிரட்டியதாகவும் பழனிச்சாமி, மலர்விழி ஆகிய இருவரை கடத்தியதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பழனிச்சாமி, மலர்விழி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
அமைச்சரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அந்தத் தம்பதியின் மகன் சிவபாலன், அமைச்சர் தன்னை கடத்தவில்லை என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா இதையெல்லாம் மறுத்து வந்தார். நிரபராதி என்று நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில் பழனிச்சாமி- மலர்விழி தம்பதியினர் தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டு மனித உரிமை ஆணையத்தில், அமைச்சருக்கு எதிராக புகார் கொடுத்தனர்.
இப்பிரச்னை குறித்து உளவுத்துறை மூலம் விசாரித்த தமிழக முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ராஜாவை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநர் பர்னாலாவிற்கு பரிந்துரைத்தார்.
இவர் வசமிருந்த கைத்தறி மற்றும் ஜவுளித்துறை, பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
புகார்களைத் தொடர்ந்து பதவி இழக்கும் இரண்டாவது அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா ஆவார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் தன் உறவினருக்காக சிபாரிசு செய்யப்போய், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிக்கி பதவியை இழநதார் என்பது குறிப்பிடத்தக்கது .
தக்க ஆதாரம் கிடைத்ததால் ராஜாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.









































