Wednesday, 6 Aug 2008
கைதான விடுதலைப்புலிகள் பரபரப்பு வாக்குமூலம்:
மனைவியாக நடித்த கல்லூரி மாணவி எங்கே?
சென்னை: சென்னையில் வெடிப்பொருட்களுடன் பதுங்கி இருந்த மேலும் 2 விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கு வெடிகுண்டு பொருட்களை கடத்திச் செல்லும் அவர்களுடைய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.
இலங்கையில் போர் காரணமாக விடுதலைப்புலிகளுக்குத் தேவையான வெடிப்பொருட்கள், உணவுப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, இதை தடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவின்பேரில், காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இலங்கைக்கு தொலைதொடர்பு சாதனங்களை கடத்த முயன்றதாக விடுதலைப்புலிகளின் ஏஜெண்டு செல்வக்குமார் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மேலும் 2 விடுதலைப்புலிகள் சென்னையில் சிக்கினர்.
சென்னை திருமங்கலம், திருவள்ளீஸ்வரர் நகர், இளங்கோ தெருவில் ரகசியமாக தங்கியிருந்த அப்பாதுரை என்கிற அமலன்(29) உமாரமணன் என்கிற தணிகைவேந்தன்(23) ஆகிய விடுதலைப்புலிகளை சென்னை காவல்துறையினர் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் படை வீரர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கள்ளத்தோனி மூலம் ராமேஸ்வரம் வந்த அமலன் கடந்த 4 மாதமாக அகதிகள் என்ற பெயரில் வசித்துவந்தார். உமாரமணன் விமானம் மூலம், சுற்றுலா விசாவில் சென்னை வந்துள்ளார்.
பின்னர் இந்த இருவரும் சந்தித்துப் பேசி திருமங்கலத்தில் வாடகைக்கு வீடுபிடித்து தங்கியுள்ளனர். அவர்களிடம இருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் நைட்ரேட் என்ற வெடிப்பொருள் 11/2 கிலோவும் பென்சில் பேட்டரிகள் 12ம், ரூ.23ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் சென்னையில் தங்கியிருந்து, விடுதலைப்புலிகளின் பயன்பாட்டிற்காக வெடிபொருட்களை வாங்கி, இலங்கைக்குக் கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தனர். தமிழக காவல்துறையினர் தக்க சமயத்தில் தடுத்துவிட்டனர்.
மேலும் அமலனின் மனைவியாகவும் கல்லூரி மாணவியாகவும் நடித்த பெண்ணை சென்னை காவல்துறையினர் தேடிவருகின்றனர். அகதிகள் போர்வையில் சென்னை நகருக்குள் மேலும் விடுதலைப்புலிகள் நுழைந்துள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.









































