Sunday, 3 Aug 2008

Severe search for terrorists in TN

தீவிரவாதிகள் பதுங்கலா?:
தமிழகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை

சென்னை: சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) வெடிகுண்டு வெடிப்புகளை நிகழச் செய்யும் திட்டத்துடன் 15 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்தது தமிழகம் முழுக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று வெடிகுண்டுகளால் பல இடங்களை தகர்க்க ‘இறைவன் ஒருவனே’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதுதொடர்பாக நெல்லையில் அப்துல் கபூர், ஹீரா மற்றும் மதுரையில் முஸ்தபா ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் கொடுத்தத் தகவலின்படி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலி அப்துல்லாவும் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபடியே சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

எனவே, அலி அப்துல்லா, அப்துல் கபூர், ஹீரா மூவரையும் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்தனர்.

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை, நெல்லை ஆட்சியர் அலுவலகங்கள், சென்ரல் ரயில் நிலையம், மதுரை மீனாட்சி ஆலயம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று  குண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும், தாங்கள் காவல்துறையில் சிக்கினால் தங்கள் கூட்டாளிகள் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றுவவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

அலி அப்துல்லாவின் கூட்டாளிகள் 15 பேர் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருவில் இமாம் அலி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் கோபத்தில் இருந்த அவரது கூட்டாளிகள் அலி அப்துல்லாவுடன் கூட்டணி  சேர்ந்து முக்கிய இடங்களில் வெடிகுண்டுவைக்க தயாராகி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அலி அப்துல்லாவின் கூட்டாளிகள் மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிர வேட்டையை தமிழகம் முழுக்க காவல்துறை நடத்திவருகிறது.

தீவிரவாதிகளைப் பிடிக்க மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 7 தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts Title


Leave a Reply