Friday, 1 Aug 2008

Manmohan Singh goes Srilanka today to attend SAARC summit

நாளை கொழும்புவில் சார்க் மாநாடு:
பிரதமர் இன்று இலங்கை பயணம்

manmohan-with-rohitha-bogollagama.jpg

டெல்லி: இலங்கை கொழும்பு நகரில் நாளை தொடங்க உள்ள சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று  புறப்படுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், மாலத்தீவு, பூடான் ஆகிய எட்டு நாடுகள் அடங்கிய தெற்காசிய கூட்டமைப்பின் (சார்க்) 15ஆவது மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை தொடங்குகிறது. இதில் பங்கேற்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலையில் இலங்கை செல்கிறார்.

நாளை தொடங்கும் உச்சிமாநாட்டின்போது சார்க் நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதுதவிர வர்த்தகம் உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் வரை நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது. இந்தியா உள்பட 4 நாடுகளில் தீவிரவாதம் அதிகரித்து வருவது குறித்து அலசப்படும்.

சார்க் மாநாட்டில் பார்வையாளர் அந்தஸ்து பெற்ற நாடுகளாக அமெரிக்கா, சீனா, கொரியா, ஜப்பான், ஈரான், ஐரோப்பிய யூனியன் ஆகியவை உள்ளன. தற்போது ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் நாடுகள் விண்ணப்பித்து இருப்பதால், அது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

சார்க் வளர்ச்சிக்காக ரூ.396 கோடி நிதி உதவி செய்வதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதில் ஏற்கனவே 80 கோடியை கொடுத்துவிட்டது. மீதியை இந்த நிதி ஆண்டின் இறுதியில் அளிக்கும் எனத் தெரிகிறது. இதுதவிர தெற்கு ஆசியப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக டெல்லியில் 100 ஏக்கர் நிலம் வழங்கவும் இந்தியா முன்வந்துள்ளது.

பிரதமரின் இலங்கை பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறுகையில், ”தெற்கு ஆசியா முழுவதும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை ஒடுக்க உறுதியான நடவடிக்கை அவசியம். இந்திய மீனவர்கள் பிரச்னை பற்றி ஏற்கனவே பலமுறை இந்தியா குரல் எழுப்பியுள்ளது” என்று தெரிவித்தார்.

தற்போது சார்க் அமைப்பின் தலைமை பொறுப்பில் இந்தியா இருக்கிறது. அடுத்த ஆண்டுக்கான தலைமைக்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது பொறுப்புகளை இலங்கையிடம் ஒப்படைக்க உள்ளது.

இந்த ஆண்டின் சார்க் மாநாட்டின் வாசகமாக ‘நம்முடைய மக்களுக்காக இணைந்திருப்போம்’ என்ற வாசகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது

சார்க் மாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஜா கிலானியை முதல் முறையாகச் சந்தித்துப் பேசவிருக்கிறார் மன்மோகன் சிங். அதே சமயம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரான ஷா முகமது குரைஷியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேச இருக்கிறார்.

பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்பின்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் சிக்கல்கள் குறித்து  பேசப்படும்.

Related Posts Title


Leave a Reply