Kuselan release… Rajni ask apologises to kannada people
குசேலனைத் கர்நாடகாவில் திரையிட…
கன்னட மக்களிடம் ரஜினி பகிரங்க மன்னிப்பு!

கன்னட ஆதரவாளர்கள் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு ரஜினி வருத்தம் தெரிவித்தார்.
இதையடுத்து அவருடைய குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை (இன்று) வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஒகேனக்கல் பிரச்னை ஏற்பட்டபோது தமிழகத்தில், திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ரஜினி பேசுகையில் கன்னடர்களை தாக்கி பேசியதாகக் கண்டனம் எழுந்தது.
ரஜினியின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. ரஜினியின் திரைப்படங்களை கர்நாடகாவில் வெளியிடவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் கர்நாடக சினிமா வர்த்தக சபைக்கு ரஜினி எழுதிய கடிதத்தில், கன்னட மக்களுக்கு எதிராக தான் பேசியிருந்தால் அந்தப் பேச்சால் அவர்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக தான் வருந்துவதாக கூறியிருந்தார்.
மேலும் குசேலனை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என்று கோரி கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரஜினிக்கு எதிராக, கர்நாடக சினிமா வர்த்தக சபைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டம் நடந்த இடத்துக்கு வர்த்தக சபைத்தலைவர் நடிகை ஜெயமாலா சென்று பேச்சுவார்ததை நடத்தினார்.
அப்போது ஜெயமாலா கூறுகையில்,
”குசேலன் திரைப்படத்தை தடை செய்யும் அதிகாரம் வர்த்தக சபைக்கு இல்லை. இந்தப் பிரச்னை குறித்து நான் ஏற்கனவே ரஜினிகாந்த், படத் தயாரிப்பாளர் பாலசந்தர், இயக்குநர் வாசு ஆகியோரிடம் பேசினேன். ரஜினியும் வருத்தம் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் நேரடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவருடன் நான் பேசுகிறேன். எனவே போராட்டத்தை கைவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் கன்னட அமைப்பினரோ குசேலன் திரைப்படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஐதராபாத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரஜினி, ஒகேனக்கல் பிரச்னையின்போது தான் பேசியது தவறு என்று இப்போதுதான் புரிகிறது என்றும், அதற்காக தான் கன்னட மக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், இனிமேல் அவ்வாறு தான் பேசமாட்டேன் என்றும் பகிரங்கமாக வருத்தம் (மன்னிப்பு?) தெரிவித்துள்ளார் ரஜினி.
ரஜினி வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் இன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
Related Posts Title
Tags: Karnataka, Kuselan movie, Rajni, கர்நாடகா, குசேலன்