Tuesday, 29 Jul 2008
தமிழகத்தில் 2 கட்ட தாக்குதலுக்குச் சதி!: சென்னை, நெல்லையில் பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்குமூலம்
சென்னை: தமிழ்நாட்டில் 2 கட்டமாகத் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டியிருந்ததாக பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
பெங்களூரு, ஆமதாபாத் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்த தொடர் வெடிகுண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி ஆணையின்படி தமிழகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்தச்சோதனையில் கடந்த சனிக்கிழமையன்று நெல்லையில் அப்துல் கபூர் என்கிற தீவிரவாதியும், சென்னையில் ஹீராவும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக நெல்லையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் அன்வர் பாஷாவும் கைதானார்.
அப்துல் கபூரிடன் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை அண்ணாமேம்பாலம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தெரிய வந்தது.
இதேப்போல் ஹீராவிடம் நடத்தப்பட்ட விசாரணயில், ஆகஸ்ட் 1ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை மற்றும் நெல்லையில் 2 கட்டமாக குண்டு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தோம். அப்துல் கபூர் ஏற்கனவே எங்கள் ‘இறைவன் ஒருவனே’ இயக்கத்தில் சேர்ந்து வெடிகுண்டு தயாரிப்பை கற்றுத் தேர்ந்தவர். அதனால் அவரை வைத்து ஆகஸ்ட் 1இல் முதல்கட்டத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.
29ஆம் தேதி எல்லோரும் ஒனறு கூடி பேச இருந்தோம். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்கட்டமாக சென்னை அண்ணா மேம்பாலம் அல்லது சென்னை சென்ரல் ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்க நினைத்திருந்தோம். 2ஆம் கட்டமாக ஆகஸ்ட் 15இல் சென்னை மற்றும் நெல்லையில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தோம். இந்தத் திட்டங்கள் எல்லாம் புழல் சிறையில் உருவானவை என்று கூறியுள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு சதியின் பின்னணியில் இருப்பவர்களை தமிழக காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.









































