Sunday, 27 Jul 2008
குஜராத்தில் பயங்கரம், 17 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்:
2 கார் நிறைய குண்டுகள், பலி 50 ஆனது
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாட்டையே உலுக்கும் வகையில் 17 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அந்த குண்டுகள் 50 பேரின் உயிரை பலிவாங்கின. இதுபோதாது என்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் குண்டுகள் நிரப்பப்பட்ட 2 கார்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைப்பற்றினர். குண்டுகள் வெடிக்கும்முன் அவற்றை செயலிழக்கச் செய்தனர். இதனால் பெரு ம் உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் தவிர்க்கப்பட்டன.
பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை (25/07/08) 8 இடங்களில் 9 குண்டுகள் வெடித்தலில் 2 பேர் உயிரிழந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீள்வதற்குள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 17 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 50 பேர் பலியாகினர். குண்டு வைத்த தீவிரவாதிகளை தேடு்ம் பணியில் அம்மாநிலக் காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
அகமதாபாத் நகரில் வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்ந்து காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதியான மணி நகரில் ஒரு குப்பைத் தொட்டியில் குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
அம்ரைவாடியின் ரமோல் பகுதியிலும், காந்திநகர் காடியா பகுதிகளிலும் குண்டுகள் கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
சூரத் நகரில் அரசு மருத்துவமனை அருகே மரப்பெட்டி ஒன்றில் இருந்தும் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வெடிகுண்டு மட்டும் வெடித்திருந்தால் அந்த மருத்தவமனையே தூள்தூளாகி இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவி்த்தனர்.
புனேகாம், வராச்சா பகுதிகளில் அனாதையாக நின்றிருந்த 2 கார்களில் கொத்துகொத்தாக இருந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
இந்தகுண்டு வெடிப்பு நிகழ்வு குறித்து அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் ஆசிஷ் பாட்டியா கூறுகையில்,
”குண்டுவெடிப்பு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருகிறோம். இந்த குண்டுவெடிப்புக்கு சிமி தீவிரவாதிகள்தான் காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குண்டுகளை அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி தீவிரவாதிகள் தயாரித்துள்ளனர். சில இடங்களில் காஸ் சிலிண்டர்களையும் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்” என்றார்.









































