பெங்களூரு குண்டுவெடிப்பு: குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் தலைவர்கள் கண்டனம்
பெங்களூரு: பெங்களூருவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் பெங்களூருவில் மதியம் ஒரு மணி அளவில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக நகரில் உள்ள 7 இடங்களில் 8 குண்டுகள் தொடர்ந்து வெடித்தன. இதில் ஒரு பெண் உடல் சிதறி பலியானார். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்புக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்:
நாட்டடின் அமைதியை குலைப்பதற்காக திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி:
அமைதியை குலைக்கும் வகையில் நடத்தப்பட்டிருக்கிறது இந்தத் தாக்குதல். அமைதி, ஒற்றுமையை காப்பதன் மூலம் இதை நாம் முறியடிக்கவேண்டும்.
பிரதமர் மன்மோகன் சிங்:
தீவிரவாதிகளின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது. இதன்மூலம் மக்களிடம் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்தக் கொடிய எண்ணத்திற்கு மக்கள பலியாகி விடாமல் அமைதி காக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்:
அப்பாவி மக்களின் உயிர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த குண்டு வெடிப்பு கடும் கண்டனத்திற்கு உரியது. குற்றவாளிகளைப் பிடிக்க கர்நாடக அரசிற்கு, மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும். இதுபோன்ற சம்பவங்களால், மத்திய அரசு எடுத்து வரும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தடுக்கமுடியாது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா:
கர்நாடகத்தில் நிலவும் அமைதியைக் கெடுக்கவும், பொதுமக்களிடையே குழப்பத்தை உண்டாக்கவும் நடந்த திட்டமிட்ட சதியாகும். இதனால் பீதி அடையத் தேவையில்லை. மக்கள் வதந்திகளை நம்பாமல், அமைதி காக்க வேண்டும். மடிவாளா பஸ் நிலையப் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். காயமடைந்த அனைவருக்கும் சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்:
பெங்களூரு குண்டுவெடிப்பு நிகழ்வுகளைக் கேட்டு திடுக்கிட்டேன். இத்தகையச் சம்பவங்கள் நடக்க உளவுத்துறை சரிவர இயங்காததே காரணம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில் நடக்கும் தென்னிந்திய டி.ஜி.பி.க்கள் மாநாட்டிற்காக நேற்று சென்னை வந்த கர்நாடக மாநில காவல்துறை டி.ஜி.பி. ஸ்ரீகுமார் கூறுகையில்,
”இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக மக்கள் தாங்கள் அறிந்ததை காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும். அது விசாரணைக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்றார்.
Related Posts Title































