» 2008/07/25 Junior Kelvi Pathil .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 25 Jul 2008

2008/07/25 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

சி.ஜெயகுமார், மதுரை.

திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்கிறார்கள். ஆனால் சில பயிர்கள் வருடக் கணக்கிலேயே வாடிவிடுகின்றனவே?

விளைநிலம் அப்படி! டன் கணக்கில் உரம் போட்டாலும் சில நிலங்களில் கிலோ கணக்கில்தான் அறுவடை செய்ய முடிகிறது. பெண்களுக்குச் சம்பாத்தியத்திலும் எளிமை வேண்டும். ஆண்களுக்கு முன்பைவிடப் பொறுமையும் சகிப்பு மனப்பான்மையும் வேண்டும். உப்புப் பெறாத விஷயங்களுக்கெல்லாம் பிரிவது என்பது மேலைநாடுகளில் என்பார்கள். இப்போது இவ்வியாதி இந்தியாவிலும் பரவி வருகிறது.


ஜே.மாத்யூஸ், சின்னமலை.

சென்னையில் ஒரே நாளில் 6000 ரவுடிகள் அடையாளம் காணப்பட்டிருப்பது பற்றி?

தேர்தல் கமிஷனரிடமிருந்து ‘அடையாள அட்டை’ வழங்கும் பணியைக் காவல்துறை கைப்பற்றிக் கொண்டதோ? இல்லாவிட்டால், ஒரே நாளில் இவ்வளவு பேருக்கு அடையாள அட்டை வழங்கியிருக்க முடியாதே?


ஆர்.பாலாஜி, ஓசூர்.

பட்டப்படிப்பு நல்லதா? தொழில் படிப்பு நல்லதா?

உங்களுக்கு படிப்பும் வேண்டும். தொழிலும் வேண்டும் என்றால் இப்படித் தேர்ந்தெடுங்களேன். தொழில் தரும் படிப்பு.


எஸ்.மீனாட்சி, மேலூர்.

அரசியலில் இறங்க வேண்டும் என்கிற ஆசை வந்தது உண்டா?

இதுவரை இல்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குப் பேசப்படும் விலையைக் கேள்விப்பட்டதிலிருந்து மனம் அசைந்து கொடுக்கிறது.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

அரசு கேபிள் முறையை வரவேற்கிறீர்களா?

எத்தனையோ குடும்பங்கள் செலவு குறைகிறது என்று மகிழ்வதைப் பார்க்கும்போது நாமும் வரவேற்கத்தானே வேண்டும்?

கே.வெங்கட், கடலூர்.

முன்னாள் நீதிபதிகள் ஆளுநர்களாக நியமிக்கப்படுவதை வரவேற்கலாமா?

யோசிக்க வேண்டும். பின்னாளில் ஆளுநர் பதவிக்கு ஆசைப்பட்டு ஆளுங்கட்சிக்குப் சாதகமான தீர்ப்புகளை வழங்கும் அபாயம் இதில் உள்ளது. நீதிபதிகளும் மனிதர்கள்தாமே!


எஸ்.சேகரன், வேளச்சேரி.

மனைவி கையால் கணவன் அடி வாங்கினால் கேவலமா?

இந்தச் செல்ல அடியைப் பெறக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். செம அடி என்றால் போன ஜென்மத்தில் ஏதோ பாவம் செய்திருக்க வேண்டும்.


எஸ்.பி.சண்முகம், கட்டனாச்சம்பட்டி.

அரசியல்வாதிகள் கனவு காண்பதற்கும், சாமான்யன் கனவு காண்பதற்கும் என்ன வித்தியாசம்?

அரசியல்வாதிகள் அஸ்திவாரம் இல்லாமலேயே கோட்டையைக் கட்டி அதில் குடியேறி இருப்பார்கள். சாமான்யர்களோ அஸ்திவாரம் போட்டும் கோட்டையைக் கட்ட முடியாமல் கோட்டை விட்டிருப்பார்கள்.


கா.சபி, திண்டுக்கல்.

உங்கள் கனவில் எந்த நடிகையாவது வருவதுண்டா?

என் மனது தி.மு.க. காலத்து மெரீனா! அதில் எந்த இடிப்பு வேலைகளும் நடைபெறுவதில்லை.


ஆர்.மணிகண்டமணி, திருத்தணி.

ரஜினி சொன்ன வெள்ளை உணவுத் தத்துவம் உங்களுக்கு உடன்பாடுதானா?

இதைப் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருபவன் என்பதை என் நெருங்கிய வட்டத்தைக் கொண்டு உங்களுக்கு என்னால் நிரூபிக்க முடியும். இதற்கான நன்றிகள் இயற்கை மருத்துவர் டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டிக்கும் சைதை துரைசாமிக்கும் உரியவை.


எஸ்.கமலநாதன், சென்னை-20.

பீச் வாலிபால் விளையாட்டிற்கு வரவேற்பு இருக்கிறதே?

விளையாட்டிற்கா வரவேற்பு? ரொம்ப அப்பாவி சார் நீங்க!


டி.பவளராஜன், திருச்சி.

விலைவாசி உயர்வை எப்படிச் சமாளிக்கிறீங்க?

ஒருவேளை உணவைக் குறைப்பதுடன் சைக்கிள் வாங்குவது பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.


ஆர்.வி.குமார், சென்னை.

நீங்கள் அறிந்தவரை தமிழக மக்களின் குணாதிசயம் எப்படி?

ஒன்றா, இரண்டா எடுத்துவிட. நம்ம மக்கள் இருக்கிறார்களே, அவர்கள் ஆற்றலில் சிவன், பொறுமையில் இராமன், தானத்தில் கர்ணன், உறக்கத்தில் கும்பகர்ணன்.


டி.வி.ரமேஷ், கொரட்டூர்.

கம்ப்யூட்டர் யுகத்தில் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் குறைவா?

கம்ப்யூட்டர் படித்தவர்களுக்குத்தான் அந்த வாய்ப்புக் குறைவு. அவர்கள் ‘ரூட் பஸ்கள்’ மாதிரி! ஒரு குறிப்பிட்ட தடத்தில்தான் அவர்கள் பயணிக்க வேண்டும். ஒன்றுமே படிக்காதவர்கள் ஆம்னி வேன்கள் மாதிரி! எங்கும் பறக்கலாம். நினைத்த இடத்தில் நிற்கலாம்! மீண்டும் ஓடலாம்.


டி.பவன்குமார், மாதவரம்.

எது பத்தியம்? எது விஷம்?

எப்போதாவது சண்டை போடும் மனைவி நமக்கு பத்தியம். எப்போதும் சண்டை போடும் மனைவி நமக்கு விஷம். எனது பத்தியம் பக்கத்தில் இல்லாததால்தான் இதைக்கூட சத்தமாய்ச் சொல்ல முடிந்தது.


‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.

இலங்கைப் பந்து வீச்சாளர் மெண்டிசை இந்திய அணி சமாளிக்குமா?

இவரை வெற்றி கொள்வதற்கான வியூகம் இந்நேரம் வகுக்கப்பட்டிருக்கும். முரளியையும் ஷேர்வார்னையும் என்ன சேதி என்று கேட்டவர்கள் இந்திய ஆட்டக்காரர்கள் மட்டுமே. இந்தியர்களுக்குச் சுழற்பந்து வீச்சு என்பது அல்வாத்துண்டு. ஒரு தடவை ஏமாறலாம். தொடர்ந்து ஏமாறமாட்டார்கள்.


ஏ.அப்துல்ஹமிது, பெங்களூர்.

இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இருவருள் யாரைப் பிடிக்கும்.

உங்களின் இரு கண்களுள் எது உங்களுக்குப் பிடிக்கும் என்கிற என் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னபிறகு சொல்கிறேனே!


எம்.தரணி, தூத்துக்குடி.

அரசியல் உலகம் இப்போது தாதாக்களின் கைகளில் இருக்கிறதாமே?

இருக்கிறது என்பது ஓல்டு நியூஸ்! இறுகுகிறது என்பதுதான் ஃப்ளாஷ் நியூஸ்.


பி.கார்த்திகேயன், சென்னை.

சத்தியமூர்த்திபவனில் கோஷ்டி கானம் கேட்பது எப்போது நிற்கும்?

கட்டும் போதே அதை பெவிகால் கொண்டு கட்டியிருக்க வேண்டும். வேகாத செங்கற்களால் கட்டியது தப்பாகிவிட்டது. அதுதான் பொலபொலக்கிறது. எல்லாம் தங்கபாலுவின் அரவணைப்பில் இருக்கிறது.


கே.சபாபதி, சிதம்பரம்.

பிரிந்த பிறகும் ராமதாஸ் அடக்கி வாசிக்கிறாரே?

மகன் மத்திய சுகாதார அமைச்சராக இருப்பதால் அடக்கி வாசிப்பதில் மகனின் சுகாதாரமும் இருக்கிறது. ராமதாஸ், இலேசுப் பட்டவர் அல்லர்! விஷயமானவர்!


ஜி.லோகநாதன், ஆழ்வார்பேட்டை.

அண்ணன்-தம்பிகள் எப்படியிருக்கிறார்கள?

நன்றாகவே கிண்டலடிக்கிறீர்கள். அரசுத் தொலைக்காட்சியின் அதிரடிகளுக்கெல்லாம் அஞ்சாமல் நவீனங்களுக்குத் தாவிக் கொண்டிருக்கிறார்கள். அசைக்கமுடியாது இவர்களை!


என்.பிரகாசம், சென்னை.

அ.இ.அ.தி.மு.க.வில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

கட்சிக்காரர்கள், தங்கள் தலைவியின் திருமுகத்தைக் காணாவிட்டாலும், அவரின் திருவடியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்குக் கொடநாட்டு வாழ்க்கை குளிர்கிறது. தொண்டர்களுக்கோ தணலாய்க் தகிக்கிறது.


என்.முரளி, கடலூர்.

அமைச்சர் பதவி தரச் சொல்லி தமிழக காங்கிரசின் புதிய தலைமை வலியுறுத்துமா?

காங்கிரசாருக்கு சென்னையிலேயே எப்போதோ ஏழுமலையான் தரிசனத்தைக் காட்டியவர் முதல்வர் கலைஞர். இந்த மோசமான மத்திய அரசியல் நேரத்திலா இது சாத்தியப்பட போகிறது? ஒருக்காலும் இல்லை.

எஸ்.சீனு, வந்தவாசி.

வாஜ்பாய் கட்சியில் இருக்கிறாரா?

பாரதிய ஜனதா பெயர்ப் பட்டியலில் இருப்பதாய்ப் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். மற்றபடி வாக்காளர் பட்டியல் சாட்சியாய் அவர் இருக்கிறார். அதில் சந்தேகமில்லை. உடல்நலக் குறைவு இவரைப் பின்வரிசைக்குத் தள்ளிவிட்டது. இனி அத்வானிதான். வாஜ்பாய் ஆலோசனை மட்டும் அளிக்கும் பிதாமகன்தான்!


கே.லட்சுமணன், விழுப்புரம்.

இலங்கையால் தமிழகத்திற்கு ஆபத்தா?

நேரடி ஆபத்து வராது. மறைமுக ஆபத்து உண்டு. பக்கத்து வீடு எரிந்தால், அதனால் நமது வீட்டிற்கும் கதகதப்புத்தான்! அந்தக் கதகதப்பு நமது வீட்டை எரிக்காமல் இருந்தால் சரி! எதற்கும் முன்னெச்சரிக்கை என்ற தண்ணீர் லாரிகளோடு நிற்போம்.

18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


2 Responses to “2008/07/25 Junior Kelvi Pathil”

  1. dari

    dhanush’s birthday?

  2. dari

    dhanush’s birthday?

Leave a Reply