Thursday, 24 Jul 2008
2 மெகா மின்திட்டங்கள்: தில்லி குழு 29 இல் வருகை: முதல்வர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் ரூ.32 ஆயிரம் கோடி செலவில் 2 அனல்மின் நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி டெல்லியில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு சென்னை திரும்பினார். பின்னர், அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டி விவரம் வருமாறு:
தமிழகத்திற்கு மத்திய அரசு தரும் 100 மெகாவாட் மின்சாரம் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்?
நாம் கேட்டது நாளொன்றுக்கு 300 மெகாவாட். மற்ற மாநிலங்களில் இதைவிட அதிகமாக மின்சாரப் பற்றாக்குறை இருப்பதால் ஓரளவுதான் தர இயலும் என்று பிரதமர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து எங்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ஷிண்டே, முதல்கட்டமாக 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு 100 மெகாவாட் மின்சாரம் தருவதாக உறுதியளித்தார்.
தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறை எப்போது நீங்கும்?
மத்திய அரசுடன் பேசியதில் 2 அல்ட்ரா மின்திட்டங்களை ரூ. 32 ஆயிரம் கோடியில் தமிழ்நாட்டில் தொடங்க முடிவு செய்துள்ளார்கள். அதில் ஒன்று செய்யூரிலும் மற்றொன்று மரக்காணம் அல்லது கடலூரில் அமையும். எந்த இடம் என்பதை டெல்லியில் இருந்து 29 ஆம் தேதி வரும் குழு ஆய்வு செய்து அறிவிக்கும். இந்த 2 திட்டங்கள் மூலம் 8000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்நிலையங்களை மத்திய அரசே அதன் செலவில் அமைக்கவேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசுக்கு எதிராக இடதுசாரிகள் நாடு முழுவதும் பிரசாரம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறதே! இதில் தி.முக. வின் நிலை என்ன?
எங்கள் குழுவைக் கூட்டி முடிவு செய்து அறிவிப்போம்.
காங்கிரசை அழிக்க நினைக்கும் இடதுசாரிகள் தங்கள் கூட்டணணியில் தொடருவது கூட்டணி தர்மமா?
தமிழக அரசியல் வரலாற்றை, இந்திய அரசியல் வரலாற்றை புரட்டிப்பார்த்தால், மாநிலத்திற்கு மாநிலம் இதுபோன்ற பிரச்னைகளில் கொள்கை நடைமுறைகளை மாற்றிக்கொண்ட கட்சிகளின் பெயர்கள் உங்கள் நினைவுக்கு வரும்.
கேரளாவில் மற்ற மாநில மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்க சட்டம் வருகிறதாமே?
ஒவ்வொரு மாநிலமும் இப்படி சட்டம் கொண்டு வந்தால் என்னாவது?
மூன்றாவது அணி பற்றி இடதுசாரிகள் தங்களுடன் பேச வந்தால்?
நான் 4ஆவது அணி பற்றி பேசுவேன் என்று பதிலளித்தார் தமிழக முதல்வர் கருணாநிதி.









































