Thursday, 24 Jul 2008
சபாநாயகராக சோம்நாத் தொடருவார்:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆதரவு
டெல்லி: மக்களவைத் தலைவராக சோம்நாத் சாட்டர்ஜி தொடர்ந்து பதவி வகிப்பார் எனத் தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவரை பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் நேற்று சந்தித்துப் பேசினர். மக்களவைத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டாம் என்று அப்போது அவர்கள் சோம்நாத் சாட்டர்ஜியை கேட்டுக்கொண்டனர்.
மக்களவையில் 22ஆம் தேதி மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த நிலையில், அதற்கடுத்த தினம் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ குழு சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்கியது.
அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி, சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை பதவியை விட்டு விலகச்சொன்னது. கட்சியின் கோரிக்கையை அவர் நிராகரித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தலைமையேற்று வழிநடத்தினார்.
இதனால், ‘கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக’ கூறி மார்க்சிஸ்ட் கட்சி அவரை நீக்கியது.
இந்நிலையில் சோம்நாத் சாட்டர்ஜிக்கு தனது முழு ஆதரவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நேற்று தெரிவித்தது. மக்களவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.
சோம்நாத் சாட்டர்ஜி இல்லத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலை சென்றார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேசினர். பின்னர் வெளியே வந்த பிரதமர் நிருபர்களிடம் எதுவும் கூறவில்லை என்றாலும் சோம்நாத் சாட்டர்ஜியின் முகத்தில் உற்சாகம் மிகுந்திருந்தது.
அதன்பிறகு லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் சந்தித்தார். அவர் கூறுகையில், ‘சாட்டர்ஜிக்கு மக்களவையின் முழு ஆதரவும் இருக்கிறது’ என்றார்.
அதன்பின்னர் முலாயம் சிங், அமர்சிங், மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், சிவராஜ் பாட்டீல், சைபுதீன் சோஸ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் சோம்நாத் சாட்டர்ஜி பதவியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு இன்று 79 ஆவது பிறந்தநாள். இதையொட்டியும் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி அவரை குளிர வைத்துள்ளனர்.









































