மத்திய அரசுக்கு எதிராக புதிய மூன்றாவது அணி!
டெல்லி: மாயாவதி, இடதுசாரிகள், தெலுங்கு தேசம் உள்பட சிறிய கட்சிகள் உருவாக்கிய மூன்றாவது அணி இணைந்து 10 கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி மத்திய அரசுக்கு எதிராக உருவாகியுள்ளது.
மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி வெற்றிபெற்று விட்டாலும் இடதுசாரிகள் உள்பட அரசுக்கு எதிராக வாக்களித்தக் கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்திய அரசியலில் ஒரு புதிய அலையை உருவாக்க அடித்தளம் போட்டிருக்கிறார்கள்.
இடதுசாரிகள், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், சமாஜ் வாடி இல்லாத மூன்றாவது அணி மற்றும் சிறிய கட்சிகள் சேர்ந்து ஒரு மெகா கூட்டணியாக செயல்பட முடிவு செய்துள்ளனர்.
இந்தக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று டெல்லியில், மாயாவதி இல்லத்தில் நடைபெற்றது.
அணுசக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான பிரசாரத்தில் ஈடுபடுவது என்றும், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு மாற்று அணியாக செயல்படுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மாயாவதி (பகுஜன் சமாஜ்), பிரகாஷ் காரத் (மா. கம்யூ), ஏ.பி. பரதன் (இ.கம்யூ), பிஸ்வாஸ், ஜி. தேவராஜன் (பார்வர்டு பிளாக்), அபானி ராய் (புரட்சிகர சோசலிஸ்ட்), தேவே கெளடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்), சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்), கே.சந்திரசேகரராவ் (தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி), அஜய் சவுதாலா (இந்திய தேசிய லோக்தளம்), பாபுலால் மராண்டி (ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய மாயாவதி, ”மத்திய அரசு வாக்கெடுப்பில் தான் வெற்றிபெற்றதே தவிர, வெற்றிபெற கையாண்ட முறைகளால் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதையே மத்திய அரசின் வெற்றி பிரதி பலிக்கிறது” என்றார்.
புதிய அணியின் தலைவர் யார் என்ற கேள்வியை மாயாவதி தவிர்த்தார்.
இந்த அணிக்கு ஜெயலலிதா அழைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு ஏ.பி. பரதன் பதிலளிக்கையில், ”இன்னும் அதுபற்றி விவாதிக்கவில்லை படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
இந்திய அரசியலைப் பொருத்தவரை இப்போது நான்காவது முறையாக மூன்றாவது அணி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதன்முதலாக 89-91 ஆம் ஆண்டுகளில் ஜனதா தளத்தைத் தோற்றவித்த வி.பி. சிங், தி.மு.க., தெலுங்கு தேசம், அகாலி தளம், ஏ.ஜி.பி. கட்சிகள் இணைந்து மூன்றாவது அணிக்கு அடித்தளம் போட்டனர். இந்த அணி 88-89 தேர்தலில் 150 இடங்களைப் பிடித்தது. வி.பி. சிங் தலைமையிலான அரசுக்கு இடதுசாரிகளும்(53) பா.ஜ.க.வும் (89) ஆதரவளித்தன.
பின்னர் 96இல் 161 எம்.பி. க்களைப் பெற்று பா.ஜ.க. முன்னிலைப் பெற்றாலும் ஆட்சியமைக்கமுடியாத சூழ்நிலை. 140 எம்.பி.க்களைப் பெற்றிருந்த காங்கிரஸ், மூன்றாவது அணியை இடதுசாரிகள் தயவோடு (ஐக்கிய முன்னனி) உருவாக்கியது. இந்தக் காலத்தில் தான் நமக்கு தேவே கெளடா, ஐ.கே. குஜ்ரால் ஆகிய இரண்டு பிரதமர்கள் கிடைத்தார்கள்.
அடுத்ததாக முலாயம் சிங்குடன் சேர்ந்து மூன்றாவது அணியை அமைத்தன இடதுசாரி கட்சிகள். இது தேறவில்லை.
கடந்த வருடம் தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, அ.தி.மு.க உள்பட சில கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கின. இந்த அணியில் இணைந்த குறுகிய காலத்தில் ஜெயலலிதா விலகிப்போனார். மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் சாக்கில் இப்போது முலாயமின் சமாஜ்வாடியும் கழன்றுகொண்டது.
தற்போது அந்த மூன்றாவது அணிக்குத்தான் புதிய உருவத்தை கொடுக்கத் திட்டமிடுகிறார்கள் மாயாவதியும் இடதுசாரிகளும்.
Related Posts Title































