தேசிய விருது பெற
எனக்குத் தகுதி இல்லையா?:
சேரன் மீது நடிகை ப்ரியாமணி பாய்ச்சல்
‘தேசிய விருது பெற எனக்குத் தகுதி இல்லை என்று இயக்குநர் சேரன் கூறியிருக்கிறார். அந்தத் தகுதி அவர் திரைப்படத்தில் நடிக்கும் நாயகிக்குத்தான் இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ப்ரியாமணி.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் சேரன் கூறும்போது,
”இங்கே சில நடிகைகள் இருக்கிறார்கள். ஆணாதிக்கம் மிகுந்த தமிழ் சினிமா உலகில் எங்களுக்கான இடம் எது? இங்கே கதாநாயகனுக்குத்தான் முதல் இடம் என்பார்கள். ஆனால், ‘பொக்கிஷம்’ மாதிரி கனமான கதைகளை சொன்னால், காததூரம் ஓடுவார்கள்.
சமீபத்தில் தேசிய விருது வாங்கிய பிரியாமணிக்கு இந்த கதையை சொல்ல நினைத்தேன். இரண்டு நாட்கள் என் ‘செல்போன்’ அழைப்புக்குக்கூட அவர் பதில் அளிக்கவில்லை. பிரியாமணிக்கு அவர் தகுதியைவிட அதிகமாக பேரும் புகழும் சேர்ந்துவிட்டது. அவருக்கு சினிமா பற்றிய அக்கறை துளியும் இல்லை”என்றார்.
சேரனின் வார்த்தைத் தாக்குதலுக்கு இப்போது பதில் தாக்குதல் நடத்தியிருக்கிறார் ப்ரியாமணி. இதுகுறித்து அவர் கூறுகையில்,
”பிரியாமணி பற்றி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். தட்டிக் கேட்பதற்கு ஆள் இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். இயக்குநர் சேரன் என்னுடன் பேசவே இல்லை. அவருடைய அலுவலகத்தில் இருந்து ஒருவர் பேசினார்.
அவரிடம், ‘நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட மூன்று திரைப்படங்கள் கையில் இருக்கிறது. அந்த திரைப்படங்களை ‘அட்ஜஸ்’ செய்து, எப்படி தேதி கொடுப்பது? என்று தெரியவில்லை. இரண்டு நாட்கள் ‘டைம்’ கொடுங்கள்’ என்று கேட்டேன்.
2 நாட்கள் கழித்து, ஏற்கனவே பேசியவரே என்னிடம் மீண்டும் பேசினார். ‘ஸாரி, என்னால் தேதி கொடுக்க முடியவில்லை’ என்று சொன்னேன். அதில் என்ன தவறு இருக்கிறது? இதற்காக தேசிய விருது பெறுவதற்கு பிரியாமணிக்குத் தகுதி இல்லை என்று சேரன் சொல்லலாமா? அவருடைய பார்வையில், எனக்கு அந்தத் தகுதி இல்லாமல் போய் இருக்கலாம். அவருடன் நடிக்கும் நடிகைக்கு மட்டுமே அந்தத் தகுதி இருக்கிறது என்று சேரன் நினைக்கிறார் போலும்.
எப்போதுமே சிலர் பாராட்டப்படும்போது, அவருடைய வளர்ச்சி பிடிக்காத சிலர், பொறாமையில் திட்டத்தான் செய்வார்கள். அதை அந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடவேண்டியதுதான்.
நான் இப்போது ‘துரோணா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறேன். ஏற்கனவே நடித்து வந்த ‘திரக்கதா’ என்ற மலையாள திரைப்படம் முடியும் நிலையில் இருக்கிறது. தொடர்ந்து அந்தத் திரைப்படத்துக்கு ‘கால்ஷீட்’ கொடுத்து முடித்துக் கொடுக்க வேண்டும்.
இதையடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறேன். மணிரத்னம் எப்போது வேண்டுமானாலும் அழைப்பார். அவர் அழைக்கும்போதெல்லாம் போய் நடிக்க வேண்டும். அதனால்தான் வேறு படங்களை ஒப்புக்கொள்ளவில்லை ” என்றார் ப்ரியாமணி.
Related Posts Title































