Friday, 18 Jul 2008

All india strike on 30th aug: AITUC

ஆகஸ்டு 30ஆம் தேதி பொது வேலைநிறுத்தம்: ஏ.ஐ.டி.யூ.சி. அறிவிப்பு

சென்னை: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. அகில இந்திய தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா அறிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆலோசனை நடத்த ஏ.ஐ.டி.யூ.சி. ஆயத்த மாநாடு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று மாலை நடந்தது.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் குருதாஸ்தாஸ் குப்தா எம்.பி., பங்கேற்று பேசுகையில்,

”நாடு தற்போது சந்தித்துள்ள மோசமான சூழ்நிலை மற்றும் ஆகஸ்ட் 30ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படும் பொது வேலை நிறுத்தம் குறித்து விவாதிக்க இந்த ஆயத்த மாநாடு நடத்தப்படுகிறது. மன்மோகன்சிங் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளோம். இது உடனடியாக எடுத்த முடிவு அல்ல. இடதுசாரிகள் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்தபோது குறைந்தபட்ச செயல்திட்டத்தை அடிப்படையாக வைத்து கூட்டணி சேர்ந்தோம். ஆனால், குறைந்தபட்ச செயல் திட்டத்தை அமல்படுத்த அரசு மறுத்துவிட்டது.

அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக நாடு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பா.ஜ.வை எதிர்க்கவே காங்கிரசுக்கு ஆதரவு அளித்தோம். எங்களுக்கு மந்திரி பதவி தேவையில்லை. மக்கள் நலன் முக்கியம் என்று கருதிதான் ஆதரவு கொடுத்து வந்தோம். பழைய தவறை காங்கிரஸ் திருத்திக் கொள்ளும் என்று நினைத்தோம்.

பிரதமர் மன்மோகன் சிங், நிதி மந்திரி ப.சிதம்பரம், மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோரின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக நாட்டின் நிலைமை மோசமாக இருக்கிறது. எனவேதான் ஆதரவை வாபஸ் பெற்றோம்.

மக்கள் மற்றும் தொழிலாளிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும். இதற்கு அனைத்து பொதுமக்கள் மற்றும் அனைத்து சங்கங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Related Posts Title


Leave a Reply