» Kumbakonam tragedy day reminded .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Thursday, 17 Jul 2008

Kumbakonam tragedy day reminded

கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவு தினம்:
குழந்தைகளை பலி கொடுத்த பெற்றோர்கள் கதறல்

கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான சம்பவத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் கதறி அழுதபடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.

அகில இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த கோர விபத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சம்பவம் நடந்த பள்ளி முன்பு நடைபெற்றது.

இதற்காக தீ விபத்து நடைபெற்ற பள்ளியின் முன்பு மறைந்த குழந்தைகளின் படங்கள் வைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குழந்தைகளை இழந்த பெற்றோரும், உறவினர்களும் அந்த படங்களின் முன்பு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் மலர்கள் தூவியும், மெகுழுவர்த்திகள் ஏந்தியும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். சின்னஞ்சிறு குழந்தைகளும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அரசு சார்பில் அஞ்சலி செலுத்த வந்த கோட்டாட்சியர் செல்வமணியிடம் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில், ‘குழந்தைகளின் உயிரை பலி கொண்ட ஜூலை 16ஆம் தேதியை அரசு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தினமாக அரசு அறிவித்து அந்நாளில் உள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தீ விபத்து தொடர்பாக தஞ்சையில் நடைபெற்று வரும் வழக்கில் 350 பேர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தஞ்சை சென்று வருவது கடினமாக உள்ளது. எனவே இவ்வழக்கை கும்பகோணத்தில் தனி நீதிமன்றம் அமைத்து மாற்றம் செய்து வழக்கை விரைவுப்படுத்த வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, மவுன அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்த பெண்களில் சிலர் அரசு பல விதங்களில் தங்களை புறக்கணித்து வருகிறது என கூறிக்கொண்டிருந்தனர்.

தீ விபத்தில் குழந்தையை பறிகொடுத்த ஜெயலட்சுமி என்ற பெண் தீடிரென்று ஆவேசம் அடைந்து, தீக்குளிக்கப்போவதாக கூறினார். அவர் சொன்னது போலவே மண்ணெண்ணெய் கேனையும் எடுத்து வந்தார்.

உடனே அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும், கும்பகோணம் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஒ) செல்வமணியும் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.

Related Posts Title


Leave a Reply