Thursday, 17 Jul 2008
சிறையில் இருந்து தப்பிய தலீபான் தீவிரவாதிகள்:
இந்தியாவுக்கு ஆபத்து!: சர்வதேச காவல்துறை எச்சரிக்கை
டெல்லி: ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து தப்பிய தலீபான் தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்று சர்வதேச காவல்துறை (Interpol) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே கடந்த மாதம் 14ஆம் தேதி தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் சிறையில் இருந்து 835 தலீபான் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். இவர்களில் கொடிய தீவிரவாதிகளும் அடங்குவர்.
இந்நிலையில் இந்தியாவின் உயர் புலனாய்வு அமைப்பாக இருக்கும் சி.பி.ஐ.க்கு சர்வதேச காவல்துறையிடமிருந்து ஓர் அவசர எச்சரிக்கை வந்துள்ளது. அதில் காந்தகார் சிறையில் இருந்து தப்பிய 238 கொடிய தலீபான் தீவிரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபடலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
சர்வதேச காவல்துறையின் இந்த எச்சரிக்கை பற்றி உள்துறை அமைச்சக செயலாளருக்கு சி.பி.ஐ. உடனடியாக தகவல் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உளவுப்பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள், சி.பி.ஐ. அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சர்வதேச காவல்துறையிடமிருந்து வந்துள்ள எச்சரிக்கை பற்றி தீவிர ஆலோசனை நடைபெற்றது. அப்போது சிறையில் இருந்து தப்பிய தலீபான் தீவிரவாதிகள் பற்றிய விவரங்களை சேகரிக்கும்படி சி.பி.ஐக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகம் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், தலீபான் தீவிரவாதிகள் பற்றி சர்வதேச காவல்துறையின் எச்சரிக்கை பற்றி குறிப்பிட்டு, உஷாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் காஷ்மீர் மாநில காவல்துறை டி.ஜி.பிக்கும் தனியாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே காந்தகார் சிறையில் இருந்து தப்பிய கொடிய தலீபான் திவிரவாதிகள் பற்றிய தகவல்களை திரட்டும் பணியில் சி.பி.ஐ. இறங்கி உள்ளது. இதுதொடர்பாக காபூலில் உள்ள சர்வதேச காவல்துறையை சி.பி.ஐ. தொடர்பு கொண்டுள்ளது.
































