Tuesday, 15 Jul 2008

PM not playing peacemaker: govt

பிரதமர் அலுவலகம் சமரச அலுவலகமா?: மார்க்சிஸ்ட் கேள்வி

டெல்லி: தொழில் நிறுவனங்களுக்கு இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்கும் சமரச மையமாக பிரதமர் அலுவலகம் மாறக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது.

ரிலையன்ஸ் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி நேற்று முன்தினம் பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில்,

‘தங்களது சொந்த நலனை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றுக்கிடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்கும் சமரச மையமாக பிரதமர் அலுவலகம் செயல்படுவதாக இருக்கக் கூடாது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள சூழ்நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆதாயம் பார்க்க முடியுமா என்று  தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான பிரச்னையில் தலையிட்டு, சமரசம் காண  பிரதமர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இது அபாயகரமான முன்னுதாரணமாகும்’
என்று கூறப்பட்டுள்ளது.

முகேஷ்அம்பானியின் சகோதரரான அனில் அம்பானியின் நண்பர் அமர்சிங். சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளரான இவர், தனது கட்சியின் ஆதரவு மத்திய அரசுக்கு உண்டு என்று சொல்லிவிட்டு மறைமுகமாக, அம்பானி சகோதரர்களின் பிரச்னையில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தொழிலதிபர்களான அம்பானி சகோதரர்களுக்கு இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் பிரதமர் ஈடுபடவில்லை  என்று பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக பிரதமரின் பத்திரிகை ஆலோசகர் சஞ்சய் பாரு  கூறுகையில்,

”தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்னையைத் தீர்க்க பிரதமர் தலையிட மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி பிரதமரைச் சந்தித்ததுப் பற்றி சர்ச்சை எழுந்துள்ளது. இது தேவையற்றது. நாட்டின் பொருளாதாரம் குறித்து விவாதிக்க பிரதமரை தொழில்துறைச் சார்ந்தவர்கள் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் எதற்கு சர்ச்சை?” என்றார்.

Related Posts Title


Leave a Reply