Tuesday, 15 Jul 2008
தி.நகரில் முகம் கருகிய நிலையில் பிணம்:
சைக்கோ ஆசாமி மீண்டும் கைவரிசையா?
சென்னை : சென்னை குமரன் நகரில் சாலையோரம் ஒரு வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். முகம் கருகிய நிலையில் இருந்தது. சைக்கோ ஆசாமி மீண்டும் கைவரிசை காட்டியுள்ளானோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.நகர் குமரன் நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட மேற்குமாம்பலம் தலையாரி தெருவில் சாலையோரமாக அடையாளம் தெரியாத பிணம் ஒன்று இன்று அதிகாலையில் கிடந்தது. எரிந்த நிலையில் தலை முதல் கால்வரை கரிகட்டையாக இது காணப்பட்டது.
அதிகாலையில் பால் மற்றும் செய்திதாள் வாங்க சென்றவர்கள், வாக்கிங் சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த தகவல் அங்கு காட்டுத் தீயாக பரவி எராளமான பொது மக்கள் திரண்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்ற தென் சென்னை காவல்துறை இணை ஆணையர் துரைராஜ், துணை ஆணையர் முத்துசாமி, உதவி ஆணையர் சேது, ஆய்வாளர் செந்தில் முருகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பின்னர், அந்த பிணம் யாருடையது என்பதில் துப்புதுலங்கத் தொடங்கியது. சாலையோரம் கிடக்கும் பழைய பேப்பர், இரும்பு, பாட்டில் ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்யும் வாலிபர் எனத் தெரியவந்தது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் இதை உறுதி செய்தனர். அவர் பெயர், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இந்த சம்பவம் நடந்த பகுதியில் இருந்து நூறடி தூரத்தில் காவல்துறையினர் இரவு ரோந்து படை இருந்துள்ளது. அருகே காவல்துறையினர் இருப்பதை பற்றி சிறிதும் அச்சப்படாமல் தைரியமாக இந்த கொலையை செய்தது யார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் வடபழனி, தி.நகர் உள்பட அப்பகுதி மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
வடபழனியில் கடந்த மாதம் 24ஆம் தேதி பிரணவ் குடியிருப்பின் காவலாளி தலையில் கல்லைப் போட்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்தை பற்றி காவல்துறையினர் துப்பு துலக்கி கொண்டிருக்கையிலேயே ஆற்காடு சாலை பேருந்து நிறுத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரர் ஒருவரும், அதற்கு மறுநாள் நூறடி ரோட்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் கல்லால் தாக்கப்பட்டு தலை நசுங்கிய நிலையில் செத்துக் கிடந்தனர். இந்த நிலையில் சைக்கோ கொலையாளி என் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுமக்கள் பெருமூச்சு விட்டனர். ஆனால் அவர்களின் அமைதி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுநாள் மேற்கு சிவன் கோயில்தெருவில் கணேஷ் குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி கருப்பன் தீ வைத்து கொளுத்தப்பட்டார். காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடந்தது.
விசாரணையின் போது கொசுவர்த்தி சுருள் எரிந்து அதன் விளைவாக போர்வை தீ பிடித்ததால் கருப்பன் எரிந்து செத்துப் போய்விட்டார் என்று காவல்துறையினர் கூறினர்.
மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் விடியற்காலையிலே நடந்துள்ளது. இந்நிலையில் வடபழனியை அடுத்துள்ள போரூரில் சாலையோரத்தில் நண்பர்களுடன் தூங்கியவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது அருகில் மற்ற மூவர் மயங்கிய நிலையில் கிடந்தனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, செத்துக் கிடந்தவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த மணி (38) எனத் தெரிய வந்தது. மற்ற மூவரும் வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த பாபு (வயது 30), பெரியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்கிற குட்டி (வயது 40), ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 50) என்பது தெரியவந்தது. கிருஷ்ணனை தவிர மற்ற மூவரும் பழைய புட்டிகளை சேகரித்து வியாபாரம் செய்து வந்தனர்.
மணிக்கு மூக்கிலும் வாயிலும் ரத்தம் வெளியேறி இருந்தது. வேறு எங்கும் காயங்கள் காணப்படவில்லை. மற்ற மூவரும் சுமார் முன்னூறு மீட்டர் தொலைவில் மயக்கமான நிலையில் கிடந்தனர்.
அவர்கள் தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயம் இருந்தது. அவர்கள் மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவராவது மயக்கம் தெளிந்து எழுந்த பிறகே உண்மைகள் வெளிவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.









































