Sunday, 13 Jul 2008

P.M.K. will support the centre till 5 years: Ramadoss

மத்திய அரசுக்கு முழு ஆதரவு: பா.ம.க. அறிவிப்பு

தருமபுரி: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு பா.ம.க முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.

தருமபுரியில் நிருபர்களைச் சந்திந்த அவர், அப்போது கூறுகையில்,

”மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துவரும் பா.ம.க., இந்த ஆட்சி 5 ஆண்டுகளை முழுமையாக முடிக்க தனது ஆதரவை முழுமையாக அளிக்கும். அடுத்த மே மாதம் தான் தேர்தல் வரும்.

காங்கிரஸ் தலைமையிலானக் கூட்டணியில் நாங்கள் நீடிக்கிறோம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் இரா. வேலு, பா.ம.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டுவரும் நாங்கள், தமிழகத்தில் வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் 3ஆவது அணி அமையவேண்டும் என்ற விருப்பத்தை பத்திரிகைகள் வாயிலாக தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் இன்னும் பேசவில்லை.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்திற்கு உயிர் வந்ததே பா.ம.க. வால்தான். இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதோடு அதை கிடப்பில் போட்டுவிட்டார் முதல்வர் கருணாநிதி. இந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட நினைத்தால் பா.ம.க. விடாது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளை நிலங்கள் மீது கைவைக்கக்கூடாது என நான் எழுப்பிய குரல் தமிழகம் முழுவதும் இப்போது எதிரொலிக்கிறது.

சென்னை தரமணியில் டாடா நிறுவனத்துக்கு 25 ஏக்கரும், டி.எல்.எப். நிறுவனத்துக்கு 35 ஏக்கரும் தாரை வார்க்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏக்கர் ரூ. 100 கோடி என்கிறார்கள். அந்த இடத்துக்கான சந்தை விலை என்ன? அந்நிறுவனங்களுக்கு என்ன விலைக்குத் தரப்பட்டது என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளில் தமிழக அரசு செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்களை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் என்கெளண்டர் என்கிற பெயரில் 68 பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய அதிகாரத்தை காவல்துறைக்கு அரசியல் சட்டம் வழங்கவில்லை.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போதெல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தனது கடமையை முடித்துக் கொள்கிறார் முதல்வர் கருணாநிதி. பிரணாப் முகர்ஜி மூலம் ஓர் எச்சரிக்கை அறிக்கை விட்டால்போதும். இத்தகைய சம்பவங்கள் தொடராது. இதற்காக அனைத்துக் கட்சியினரையும் அழைத்துச் சென்று மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின கீழ் குரு கைது செய்யப்பட்டது குறித்து கோ.க. மணி தலைமையில் பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்திந்து முறையிடுவார்கள்” என்றார்.

Related Posts Title


Leave a Reply