Friday, 11 Jul 2008
22 ஆம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு!: மன்மோகன் சிங் அரசு தப்புமா?
டெல்லி: மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு வரும் 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோர முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இம்மாதம் 21ஆம் தேதி கூடுகிறது. அதற்கடுத்த நாள் 22ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி யேற்ற இந்த நான்காண்டுகளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது இதுவே முதல் முறை.
நேற்று டெல்லியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
59 உறுப்பினர்களை கொண்ட இடதுசாரிகள், அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இந்நிலையில் 39 உறுப்பினர்களைக் கொண்ட சமாஜ்வாடி கட்சியும் சில உதிரிக் கட்சிகளும் மத்திய அரசுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியும் வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஐக்கிய முற்போக்குக்கூட்டணிக் கட்சியினர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி ”நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை கட்டாயம் நிரூபிப்போம். அதில்.சந்தேகமேயில்லை” என தெரிவித்தார்.









































