Monday, 7 Jul 2008

India to approach IAEA soon: Manmohan Singh

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்!:
நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தயார்- மன்மோகன் சிங் உறுதி

டெல்லி: அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இப்பிரச்னையில் இடதுசாரி கட்சிகள் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்றாலும கவலையில்லை. நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடன் மத்திய அரசு செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டால் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கான விளக்கத்தை மத்திய அரசு 7ஆம் தேதிக்குள் தெரிவிக்க கெடு வைத்திருந்தன. இதற்கிடையே முலாயம் சிங் மத்திய அரசுக்கு ஆதரவு தர தயாராக இருக்கிறார். மூன்றாவது அணியை உடைத்து தனக்கு ஆதரவாக முலாயம் சிங்கை திருப்பியதிலும் காங்கிரஸ் மீது  இடதுசாரிகள் கோபத்தில் உள்ளனர். கடைசியில் வரும் 10ஆம் தேதி அல்லது பிரதமர் ஜப்பானில் இருந்து திரும்புவதற்குள் ஆதரவு திரும்ப பெறப்படும் என்று கூறியிருக்கின்றன இடதுசாரி கட்சிகள்.

இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹோக்கைடோவில்நடைபெறும் ஜி-8 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலை தனி விமானத்தில் புறப்பட்டார்.

விமானத்தில் தன்னுடன் வந்த நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

அணுசக்தி ஒப்பந்தம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அதற்காக இடதுசாரிகள் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கினாலும் அதைப்பற்றி கவலை இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் தயார் என்று தெரிவித்தார்.

”அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நாட்டு நலனுக்கு உகந்ததாகும். வெளியுறவு கொள்கையில், நாட்டு பாதுகாப்பு குறித்த திட்டங்களில் மத்திய அரசு யாருடனும் சமரசம் செய்து கொள்ளாது. இடதுசாரிகள் எங்கள் மதிப்புமிக்க கூட்டாளிகள். எங்களுக்கு இடையே பரஸ்பரம் திருப்தி அளிக்கும் வகையிலான தீர்வை எட்டமுடியும் என்று நம்புகிறேன்.

இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்று தரும். இது நமது நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவும், தொழில் நுட்பங்களை பெறவும் உதவும். இடதுசாரிகள் இந்த ஒப்பந்தத்தை கவனமாக படித்துப் பார்த்து  நல்ல முடிவுக்கு வரவேண்டும்.

அவர்களும் தேசாபிமானம் மிக்கவர்களே. நான் அவர்களுடைய உணர்வை மதிக்கிறேன். ஆனால், துரதிருஷ்டவசமாக அணுசக்தி விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது.

இந்த பிரச்னை  தீரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

இருந்தாலும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இடதுசாரிகள் அரசுக்கான ஆதரவை திரும்ப பெறுவார்கள் என்றால் அதைப்பற்றி கவலையில்லை. நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தயார்” என்று பிரதமர் கூறினார்.

Related Posts Title


Leave a Reply