Sunday, 6 Jul 2008
ஜி-8 மாநாடு: பிரதமர் இன்று ஜப்பான் பயணம்:
அணு ஒப்பந்தம் குறித்து ஜார்ஜ் புஷ்ஷுடன் 9ஆம் தேதி பேச்சு
டெல்லி: அணு ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு இடதுசாரிகள் விடுத்த கெடு இன்று முடிவடைகிறது. அதேசமயம் பிரதமர் மன்மோகன் சிங் ஜி-8 மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டி இன்று ஜப்பான் செல்கிறார்.
அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்ப பெறுவோம் என்று இடதுசாரிகள் 7ஆம் தேதி வரை (இன்று) கெடு விதித்துள்ளனர். 7ஆம் தேதிக்குள் அணு ஒப்பந்த விவகாரத்தில் அரசின் நிலையை தெரிவிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கூறியுள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு யாரும் கெடு விதிக்க முடியாது என்றும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு பதில் அளிக்க முடியாது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி விதித்த கெடு இன்று முடிவடையும் நிலையில் ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஜப்பான் புறப்படுகிறார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை 9ஆம் தேதி சந்தித்துப் பேசுகிறார். அப்போது அணு ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
அணு ஒப்பந்தம் குறித்து பிரதமரின் சிறப்பு தூதர் ஷியாம் சரண் கூறுகையில், ‘சர்வதேச அணு சக்தி ஏஜென்சியுடனான அணு உலை பாதுகாப்பு உடன்பாடு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அரசின் அனுமதி கிடைத்ததும் கையெழுத்தாகிவிடும்’ என்றார்.
மத்திய அரசுக்கான தனது ஆதரவை இதுவரையில் தெரிவிக்காமல் இருந்த முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸை ஆதரிப்போம் என்று நேற்று அறிவித்தது.
இதுகுறித்து முலாயம் சிங் பேசுகையில்,
”அணு ஒப்பந்த விவகாரத்தால் அரசு கவிழ்வதை அனுமதிக்க மாட்டேன். நாட்டு நலனைவிட வேறு எதுவும் பெரிதல்ல. அணுசக்தி வளர்ச்சிக்காக சீனா, பாகிஸ்தான் நாடுகள் கையெழுத்திடுகையில் இந்தியா மட்டும் ஏன் பின்தங்கவேண்டும்? என்றார்.









































