Saturday, 5 Jul 2008
சோப்ராஜ்-யிடம் சிறையில் சிக்கிய சின்ன மலர்:
60 வயதில் 20 மேல் ஆசை!
காத்மண்டு : சர்வதேச மோசடி மன்னன் சார்லஸ் சோப்ராஜ் 20-வயது இளம் பெண்ணை திருமணம் செய்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் சார்லஸ் சோப்ராஜ். இவர் போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து வெளிநாட்டுக்காரர்களுக்கு கொடுத்தது, சர்வதேச அளவில் குற்றச் செயல்கள் மற்றும் அமெரிக்கரைக் கொன்றது போன்ற குற்றங்கள் செய்ததால் அவர் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார். தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க சர்வதேச அளவில் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த நிலையில் நேபாள காவல்துறையினர் அவரை கைது செய்து காத்மண்டு சிறைச்சாலையில் அடைந்தனர். தற்போது 64 வயது ஆகும் அவர் அங்கு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். சார்லஸ் சோப்ராஜ் கடந்த 1960ஆம் ஆண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்த சான்தல் காம்பேக்னன் என்ற பெண்ணை முதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு தற்போது 20 வயதை தாண்டிய மகள் உள்ளார்.
ஒற்றுமையாக வாழந்து வந்த இவர்களது இல்லற வாழ்க்கை சார்லஸ் சோப்ராஜ் ஜெயிலில் அடைக்கப்பட்டபோது முடிவுக்கு வந்தது. அவரது மனைவி சார்லசிடம் விவாகரத்து வாங்கி சென்றுவிட்டார்.
இந்த நிலையில் அவரது பிரான்சு நாட்டு வக்கீல் ஒருவர் சார்லஸ் சோப்ராஜின் விடுதலைக்காக போராடி வருகிறார். ஆனால் அவர் பேசும் பிரெஞ்சு மொழி அவருக்கு புரியவில்லை. இதனால் தங்கள் இருவருக்குமிடையே மொழி பெயர்ப்பாளர் ஒருவர் தேவை என சார்லஸ் சோப்ராஜ் கூறினார். தொடர்ந்து நிகிதா என்ற 20 வயது இளம் பெண் மொழி பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். இளம் பெண் நிகிதாவின் சுறுசுறுப்பு மற்றும் கள்ளம் கபடமற்ற தன்மை ஆகியவை சார்லஸ் சோப்ராஜை மிகவும் கவர்ந்தது.
இதனால் அவர் இளம் பெண் நிகிதாவை சிறைச்சாலைக்கு அடிக்கடி வரவழைத்து, பேசினார் அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இந்த நிலையில் தனது வயதையும் பொருட்படுத்தாமல் சார்லஸ் சோப்ராஜ் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளார். இதனை அந்த பெண்ணும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இளம் பெண்ணை 2வதாக திருமணம் செய்வது பற்றி சார்லஸ் சோப்ராஜ் கூறும்போது,
”நான் நிகிதாவை பார்த்த உடனே காதல் வயப்பட்டுவிட்டேன். அப்போதே அவரை திருமணம் செய்யவும் முடிவு செய்து விட்டேன்” என்கிறார்.
இளம் பெண் நிகிதா சார்லஸ் சோப்ராஜ் பற்றி கூறும்போது,
”சார்லஸ் சோப்ராஜ் நிரபராதி. குற்றம் எதுவும் செய்யாதவர். அவர் விரைவில் விடுதலை ஆவார்” என்று கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பின் இருவரும் சேர்ந்து பரபரப்பு மிக்க சிறைச்சாலையில் மலர்ந்த காதல் பற்றி புத்தகம் எழுத முடிவு செய்து உளளனர்.









































