Saturday, 5 Jul 2008

Hungry media gets headline from state Head

பாலு வீட்டுத் திருமணம் - ஸ்டாலின் ஆப்சென்ட் - அழகிரி வரவேற்புரை!:
தலைப்புக் கொடுத்து முதல்வர் பேச்சு!

சென்னை: இடையூறுகள் பல வந்தாலும் இறுதியாக சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் தம்பி டி.ஆர். சக்திவேல் - தமிழரசி தம்பதிகளின் மகன் (டி.ஆர்.எஸ். கார்த்திக் - அனுசுயா) திருமணத்தை நடத்திவைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

”இந்தத் திருமண விழாவுக்கு வந்துள்ள பத்திரிக்கையாளர்கள் நாளை என்ன செய்தி வெளியிடுவார்கள். பாலுவைப் பற்றியா, என்னைப் பற்றியா, பேராசிரியர் உரையைப் பற்றியா என்றால் இந்தசிறப்புகளை எல்லாம், அவர்கள் கண்ட காட்சிகளையெல்லாம் முதலிடம் கொடுத்து வெளியிடுவதற்குப் பதிலாக பத்திரிகைகளில் என்ன முதலிடம் பெறும் என்பது  நானும் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் எனக்கு நன்றாகத் தெரியும்

பாலு வீட்டுத் திருமணம் - ஸ்டாலின் ஆப்சென்ட் - அழகிரி வரவேற்புரையாற்றினார் - இதுதான் நாளைக்குப் பத்திரிகைகளிலே  தலைப்பாக வரும்.

காஞ்சிபுரம் சி.வி.எம். அண்ணாமலை இல்லத்தில் நடைபெறுகின்ற திருமண விழாவில் தலைமையேற்று நடத்தி வைப்பதற்காக ஸ்டாலின் சென்றிருக்கிறாரே தவிர, பாலு மீது அவருக்கு எந்தக் கோபமும் இல்லை. பாலுவும், ஸ்டாலினும் எந்த அளவுக்கு நண்பர்களாகப் பழகுகிறார்கள் என்பது எங்களுக்கெல்லாம் கூட பொறாமையாக இருக்கும். அப்படிப் பழகுகிறவர்கள், ஆனால் இன்றைக்குப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் பணியை.

ஒருபுறத்தில் வரவேற்க அழகிரி - இன்னொரு புறத்தில் வரவேற்க ஸ்டாலின் - நன்றி கூறிட கனிமொழி - இப்படி மூன்று, நான்கு பிள்ளைகளைப் பெற்ற காரணத்தால், என்ன லாபம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

பாலுவைப் பொறுத்தவரையில், இன்றைக்கு மத்திய அமைச்சர். அவர் தஞ்சை மாவட்டத்தில், என்னைப் போல எங்கேயோ ஒரு கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒரு பிள்ளைதான். சென்னைக்கு வந்தார், படித்தார், கல்வியிலே திறன் பெற்றார். அவருடைய கட்சிப் பற்று எத்தகையது என்பதை நானும், பேராசிரியரும் நேரடியாக உணர்வோம். வேகமாகப் பேசுவார், மேடையில்மட்டுமல்ல, எங்களிடத்திலும் கூட.

அந்த வேகத்தில் கட்சிப் பற்று அதிகமாகமாக இருக்குமே தவிர ஆத்திரம், கோபம், ஆவேசம் இவை இருப்பதில்லை. இவற்றுக்கு மாறாக அத்தனையும் பாசமாக இயக்கத்தின் பற்றாக அவரிடம் இருப்பதைத்தான் நான் கவனித்திருக்கிறேன்.

சில நேரங்களில் இந்த இடத்தில் நான் நிற்கிறேன் என்பார். தென் சென்னையில் அல்லது மத்திய சென்னையில் எங்கேயோ ஓரிடத்தில் தான் நிற்கிறேன் என்பார். நானும், பேராசிரியரும் பொருளாளரும் அதைப் பற்றிக் கலந்து யோசித்து கடைசியாக அவரிடத்தில் வாதம் செய்து, இல்லை, நான்தான் நிற்பேன், எனக்குத் தான் தர வேண்டும் என்று அவர் கேட்டு, சரி என்று நாங்கள் சொன்ன பிறகுகோபிப்பார்.

ஏன்யா கோபிக்கிறே, அதுதான் சரி என்று சொல்லிட்டோமே என்றால், இவ்வளவு நாளும் முடியாது, முடியாது என்று சொன்னீங்களே என்று அதற்காக கோபிப்பார். ஆக, எப்படியோ கோபித்துக் கொண்டாக வேண்டும். அந்த உரிமைய அவர் எங்களிடத்திலே எடுத்துக் கொள்வார்.

இந்த மாவட்டத்தினுடைய செயலாளராக இருக்கிறார், மத்தியில் மந்திரியாக இருக்கிறார். மத்தியிலும் நல்ல கீர்த்தி வாய்ந்த மந்திரி என்கிற பெயரைப் பெற்றிருக்கிறார். அதிலே எங்களுக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி.

பாலு எப்படி இரண்டெழுத்துப் பெருமை உடையதோ, அதைப் போல அவரால் இன்றைக்குத் திட்டமிடப்பட்டு உருவாகிக் கொண்டிருக்கும் சேது என்பதற்கும் இரண்டு எழுத்துக்கள்தான். பாலு பெற்றிருக்கின்ற வெற்றிகளை சேதுவும் பெற வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவரால் அந்த வெற்றியைத் தேடித் தர முடியும்.

இங்கு அமர்ந்திருக்கும் தம்பி திருநாவுக்கரசர் கோபித்துக் கொள்ளவேண்டாம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வரவேற்ற திட்டம், ஏற்றுக் கொண்ட திட்டம் சேது திட்டம். அந்தத் திட்டத்தைதான் இன்றைக்கு நாம் நிறைவற்றத் துடித்துக் கொண்டிருக்கிறோம். அதைத் தடுத்தால் பாலுவின் மேன்மை குறையும். பாலுவின் பெருமை குறையும் என்று யாராவது கருதுவார்களேயானால், நான் அவர்களுக்கு சொல்கிறேன், இது இடையிலே பல தோல்விகளைச் சந்தித்தாலும், பல வீழ்ச்சிகளைச் சந்தித்தாலும், இறுதி வெற்றி - சேது சமுத்திரத் திட்டம் உருவாயிற்று - என்ற பெரியாருடைய எண்ணத்தின் வெற்றியாக, அண்ணாவின் எண்ணத்தின் வெற்றியாக, காமராஜருடைய கனவின் வெற்றியாகத்தான் அது அமையும்” என்றார்.

Related Posts Title


Leave a Reply