Friday, 4 Jul 2008
விடிகையில் விலங்கு மாட்டியது காவல்துறை: காடுவெட்டி குரு கைது!
சென்னை: தி.மு.க.- பா.ம.க. உறவை தன்னுடையப் பேச்சால் வெட்டிப் புதைத்த காடுவெட்டி குருவின் கைகளுக்கு இன்று விடியற்காலையில் விலங்கு பூட்டியது தமிழக காவல்துறை. இளைஞர் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கிற்காக அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான காடுவெட்டி குரு, வன்னியர் சங்கதத்தின் தலைவராகவும் இருக்கிறார். பா.ம.க. தலைமையின் வலது கரம்போல செயல்பட்டுவரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தமிழக முதல்வர் கருணாநிதி முதல் தி.மு.க. அமைச்சர்கள் பலரையும் ஏகவசனத்தில் பேசியதோடு, மிரட்டலும் விடுத்ததாக பேசப்பட்டவர்.
அவருடைய அந்தப் பேச்சு தி.மு.க. வில் சலசலப்பை உண்டாக்கியது. அதன்விளைவாக பா.ம.க. வை தன்னுடையக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டது தி.மு.க. தலைமை.
‘காடுவெட்டி குரு கைது செய்யப்படுவாரா?’ என்ற கேள்விக்கு, ‘சட்டப்படி நடக்கும்!” என்று அப்போது பதிலளித்திருந்தார் தமிழக முதல்வர் கருணாநிதி.
சட்டப்படி அது இன்று நடத்தப்பட்டுவிட்டது.
வருத்தம் தெரிவித்தால்கூட போதும் என்று தி.மு.க. கொடுத்த சலுகையை பா.ம.க. கண்டுகொள்ளவேயில்லை. காடு வெட்டி குருமீது எந்த நடவடிக்கையும் கட்சி மேலிடத்தால் எடுக்கப்படவில்லை.
‘கைதாக எந்த நேரமும் தயார்’ என்று அறிவித்தார் காடுவெட்டி குரு.
இந்த சூழ்நிலையில் இளைஞர் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசியலில் இது எந்தவிதமான விளைவுகளை உண்டாக்கும் என்று போகப்போக தெரியும்.









































