Friday, 4 Jul 2008
முதலில் சாதனை, அப்புறம்தான் திருமணம்!: சானியா மிர்சா
டெல்லி: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் எப்போது என்பது பற்றி பேட்டி அளித்து உள்ளார்.
இந்திய டென்னிஸ் உலகில் இளம் வீராங்கனைகளில் ஒருவர் சானியா மிர்சா. இவருக்கு இந்தியா தவிர உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. சர்வதேச அளவில் போட்டி நிறைந்த இந்த விளையாட்டில் அவர் தொடர்ந்து போராடி பல வெற்றிகளை இந்தியாவுக்கு தேடி தந்தார். இதனால் அவரது திறமையை பாராட்டி இந்திய அரசு இவரது பெயரில் தபால் தலை வெளியிட உள்ளது.
ஆனாலும் சர்வதேச விம்பிள்டன் போட்டியில் எதிர்பார்த்தபடிஅவரால் சாதனை செய்ய இயலவில்லை. சர்வதேச அளவில் அவர் 32-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. 30-வது இடத்தை பிடிக்கக் கடுமையாக போராடி வருகிறார்.
இந்த நிலையில் சானியா மிர்சா தனது டென்னிஸ் வாழ்க்கை, சினிமா மற்றும் திருமணம் பற்றி பேட்டி அளித்து உள்ளார்.
அந்த பேட்டியில் அவர்,
”நான் டென்னிஸ் உலகில் இன்னும் பெரிய சாதனைகள் எதுவும் நிகழ்த்தவில்லை. இனிமேல் சாதனைகள் நிகழ்த்த கடுமையாகப் போராட உள்ளேன். நான் டென்னிஸ் மட்டையை தூக்கிய போதே கடுமையான போராட்டத்திற்கு பிறகு தான் வெற்றி கிடைக்கும் என்பதை அறிவேன். ஆனாலும் சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நான் டென்னிஸ்ட விளையாட்டை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை.
எனது படத்துடன் இந்திய அரசு தபால் தலை வெளியிடுகிறது. நான் டென்னிஸ் விளையாடுவதே இந்தியாவிற்கு பெருமை சேர்க்கத்தான். தபால் தலையை வெளியிட்டு நாடு எனனை கவுரவித்து உள்ளது.
நான் சமீபத்தில் அமிதாப் பச்சனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவருடன் நடந்த சந்திப்பு மறக்க முடியாதது. இந்த சந்திப்பால் நான் சினிமாவில் நடிக்கிறேனா என்பது பற்றி கேட்க கூடாது. அப்படி எதுவும் இல்லை.
நான் சினிமாவில் நடிக்க போவதாக வரும் செய்தியில் உண்மையில்லை.
தற்போது இந்தியாவின் கவுரமிக்க இளம் பெண்களில் ஒருவராக கருதப்படும் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என கேட்கிறார்கள். நான் இப்போது திருமணம் செய்து கொள்ள போவது இல்லை. டென்னிஸ் உலகில் சாதித்த பிறகே திருமணத்தை பற்றி யோசிப்பேன்” என்று கூறியுள்ளார்.










































