Thursday, 3 Jul 2008
மத்திய அரசுக்கு ஆதரவு: முலாயம் சிங் அதிரடி நிபந்தனைகள்!
தில்லி: அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டிற்கு முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
இதனால் மத்திய அரசை காப்பாற்ற முலாயம் சிங்கின் ஆதரவை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்கிறது.
அணு ஒப்பந்தம் குறித்த மத்திய அரசு அலுவலகங்களின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை. இதுகுறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தப்படவேண்டும். எங்கள் சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும். அதுவரை ஒப்பந்தத்தை ஆதரிக்க முடியாது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.
அணு ஒப்பந்தத்தை எதிர்த்து, மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை இடது சாரிகள் விலக்கிக் கொண்டால், முலாயம் சிங்கின் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சியைத் தொடர மத்திய அரசு முயன்று வருகிறது.
ஆனால் சமாஜ்வாடி கட்சி அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியோ இவ்விஷயத்தில் ஒற்றுமையாக குரல் கொடுத்திருக்கிறது. அணு ஒப்பந்தத்தை ஆதரிக்க இவர்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
நேற்று தில்லியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு முலாயம் சிங், அமர்சிங், சந்திரபாபு நாயுடு, ஓம் பிரகாஷ் சவுதாலா, பாபுலால் மராண்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசினர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
”ஒப்பந்தத்தில் பல அம்சங்களில் விளக்கம் தேவைப்படுகிறது. இது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடத்தப்படவேண்டும். எதற்காக இந்த ஒப்பந்தம்? அதில் உள்ள அம்சங்கள் என்னென்ன? என்று மக்களுக்கு பிரதமரே விளக்கம் அளிக்கவேண்டும். விஞ்ஞானிகளையும் நிபுணர்களையும் கலந்து ஆலோசித்தப் பின்னரே இதுகுறித்து நாங்கள் முடிவு எடுப்போம்” என்றனர்.
”டோக்கியோவில் வரும் 7ஆம் தேதி நடக்கும் ஜி- 8 மாநாட்டுக்கு முன்னர் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது” என்று ஓம்பிரகாஷ் சவுதாலா தெரிவித்தார்.
சிதம்பரம் மற்றும் முரளி தியோராவின் பதவிகளை பறிக்கக் கோரி கோரிக்கை வைப்பீர்களா? என்ற கேள்விக்கு, ”பணவீக்கம் மற்றும் விலை உயர்வுக்குக் காரணமான அமைச்சர்கள் தேவைதானா என்று மத்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும்” என்றார்.









































