Wednesday, 2 Jul 2008
தள்ளாடும் மத்திய அரசு: தாங்கிப் பிடிப்பாரா முலாயம்? இன்று தெரியும்.
டெல்லி: அணு சக்தி ஒப்பந்த பிரச்னையில் சிக்கிக்கொண்டு தள்ளாடும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை இன்று முலாயம் சிங் அறிவிப்பார் எனத் தெரிகிறது.
மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அவர் நேற்று அமர்சிங்குடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு மத்திய அரசுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு அளிப்பதும் என்றும், வெளியே அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையை எடுப்பது என்றும் முலாயம் சிங் முடிவெடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த பிரச்னை தொடர்பாக மத்திய அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவை வரும் 6ஆம் தேதி இடது சாரிகள் கட்சிகள் விலக்கிக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன. ஜி-8 மாநாட்டுக்கு பிரதமர் செல்வது உறுதியாகிவிட்ட நிலையில் இடதுசாரிகளின் ஆதரவு வாபஸ் நிலையும் உறுதியாகிவிட்டது. அதே சமயம் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரசும் திரை மறைவு வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கவிழாமல் இருக்க சமாஜ்வாடி கட்சியை வளைத்து போடும் காங்கிரசின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக இன்று 3ஆவது அணி தலைவர்களுடன் முலாயம் சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதன் பின் தனது நிலை குறித்த அறிவிப்பினை வெளியிடுகிறார். அணுசக்தி ஒப்பந்தத்துக்கு சிவசேனாவும் ஆதரவு தெரிவித்திருப்பதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியை தழுவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்தால் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்பதால் நாடாளுமன்றத்துக்கு வெளியே தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை எதிர்க்க சமாஜ்வாடி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசை ஆதரித்து வாக்களிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3-வது அணியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும் என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் நம்புகிறார்.
அதேசமயம் நாட்டின் பணவீக்கத்திற்கும், பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்திற்கும் காரணம் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவும்தான் என்று கூறி, அவர்களை பதவி நீக்கச் சொல்லியும் சமாஜ்வாடி கட்சி கோரிக்கை வைக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி மற்றும் அமெரிக்காவிற்காக இந்தியத் தூதர் ரோஹன் சென் ஆகியோரையும் மாற்றுமாறு கேட்பதாகக் கூறப்படுகிறது. தவிர, மத்திய அமைச்சரவையில் சமாஜ்வாடி சேர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.









































